ஆப்பிரிக்காவின் காலநிலை சமநிலைக்கு மிகப்பலமாக இருக்கும் கொங்கோவின் மழைக்காடுகளில் பெற்றோலிய அகழ்வுகளுக்கான அனுமதியை விற்பனை செய்வதற்கு கொங்கோ குடியரசு முயற்சிப்பதானது உலகளவில் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவை பொறுத்தளவில் சீரான மழைப்பொழிவுக்கு கொங்கோ குடியரசில் இருக்கும், மழையை தருவிக்கக்கூடிய இயற்கையான மழைக்காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த மழைக்காடுகளின் இருப்பு வெறுமனே ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியிலும் காலநிலை சீரமைவுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. அதனாலேயே அம்மழைக்காடுகளை பாதுகாப்பதில் பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. இம்மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக நோர்வே அரசு வருடாந்தம் பெரும் பொருளாதாரத்தை கொங்கோ குடியரசுக்கு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை 2.8 பில்லியன் நோர்வே குறோணர்களை நிதியாக நோர்வே அரசு வழங்கியுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டுவரையான நிதியாக மேலதிகமாக 1.5 பில்லியன் நோர்வே குறோணர்களையும் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு பாதுகாக்கப்பட்டுவரும் மழைக்காடுகளில் சுமார் 30 இடங்களில் பெட்ரோலியப்பொருட்களின் படிமங்களை கண்டறிவதற்கான அனுமதியை விற்பனை செய்வதற்கு கொங்கோ குடியரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அனுமதி வழங்கப்படுமானால், காடுகளுக்கு நடுவே நிலத்தில் ஆழ்துளைகள் போடப்படுவதோடு, பெருமளவிலான காட்டுப்பகுதிகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதோடு, மழையை தருவிக்கும் மரங்கள் அழிக்கப்படும்போது ஆப்பிரிக்காவில் மாத்திரமல்லாது, உலகின் பெரும் பகுதிகளில் சீரான மழைப்பொழிவு இல்லாமல் கடும் வறட்சியினால் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயமும் உள்ள நிலையில், கொங்கோ குடியரசு மீது விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நோர்வே தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் விசனங்களுக்கு பதிலளித்திருக்கும் கொங்கோ தரப்பு, கொங்கோவின் மழைக்காடுகள் உலகின் பல பாகங்களிலும் சீரான மழைப்பொழிவுக்கு காரணமாக இருந்தாலும், இவ்விதம் சீரான மழைப்பொழிவை பெறும் நாடுகள், வறிய நாடான கொங்கோ குடியரசுக்கு கைமாறாக எதுவுமே செய்வதில்லை என சாடியுள்ளதோடு, கொங்கோ குடியரசுக்கு பொருளாதார பங்களிப்பை கைமாறாக செய்வதற்கான கடப்பாட்டை இந்நாடுகள் மறுதலிக்கின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளது. தவிரவும், சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டும் நோர்வே, சூழல் மாசடைவுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கும் பெற்றோலியப்பொருட்களின் உற்பத்தியை குறைத்துக்கொள்வதற்கு மாறாக, தனது பெற்றோலிய உற்பத்தியை அதிகரித்து பெரும் பொருளாதாரத்தை ஈட்டி வருகிற நிலையில், கொங்கோ குடியரசு போன்ற வறிய நாடுகள் பெற்றோலிய உற்பத்தியில் ஈடுபடுவதை தடுக்க முற்படுவதானது நோர்வேயின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது எனவும் சாட்டியுள்ள அதேவேளை, உலகின் சீரான காலநிலையை உறுதிப்படுத்துவதும், பாதுகாப்பதும் கொங்கோ குடியரசின் வேலையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.