நோர்வேயின் கழுத்தில் கைவைக்கும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம்! குடும்பநல விவகாரங்களில் மனிதவுரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு!!

You are currently viewing நோர்வேயின் கழுத்தில் கைவைக்கும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம்! குடும்பநல விவகாரங்களில் மனிதவுரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு!!

நோர்வேயில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்களின் நலன்களை பாதுகாப்பதாக சொல்லப்படும், “Barnevern” என்ற சுயாதீன அமைப்பின் கடந்த கால நடவடிக்கைகளில் மனிதவுரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, சர்வதேச மனிதவுரிமைகள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் அரசு பெரும்பாலும் தலையிடாத மேற்படி சுயாதீன அமைப்பானது, நோர்வேயில் வாழும் குடும்பங்களில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளோ அல்லது சிறுவர்களோ, அவர்களது பெற்றோராலோ அல்லது பாதுகாவலர்களாலேயோ சரியான கவனிப்பு இல்லாமலோ, அல்லது பெற்றோரோ, பாதுகாவலர்களோ குழந்தைகளை சரியான முறையில் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தாலோ, இந்த வரையறைக்குள் அடங்கும் குழந்தைகளை, மேற்படி சுயாதீன நிறுவனம் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்வது என்பது, நோர்வேயில் வழமையான நடைமுறையாகும்.

இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும் குழந்தைகள், இந்த அமைப்பின் தங்ககங்களிலோ அல்லது, இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கும் வேறு குடும்பங்களுடனோ தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான வசதிகளையும் இந்த அமைப்பே கவனித்துக்கொள்ளும்.

எனினும், பல்வேறு காரணங்களுக்காகவும் சொந்த குடும்பங்களிலிருந்து குழந்தைகளை பிரித்தெடுப்பதில் இவ்வமைப்பு கையாளும்  நடைமுடை செயற்பாடுகள் கடந்தகாலங்களில் உள்ளூரிலும், வெளியூரிலும் கடும் கண்டங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. அநேகமான சந்தர்ப்பங்களில் காவல்துறையின் உதவியோடு, அதீத உணர்வுபூர்வமான சூழ்நிலைகளில் குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு செல்லப்படும் சம்பவங்களின் காணொளிகள் பல, சமூகவலைத்தளங்களூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தர்ப்பங்களில், இவ்வமைப்பின்மீதான மக்களின் விசனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

அரசின் தலையீடுகளோ அல்லது நீதித்துறையின் தலையீடுகளோ இல்லாமல் சுயாதீனமாக இயங்கும் இந்த அமைப்பிற்கெதிராக பெற்றோரால் தொடரப்படும் வழக்குகளிலும் பெரும்பாலும் இந்த அமைப்புக்கு சார்பான தீர்ப்புக்களே வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டில், இளம் தாய் ஒருவரிடமிருந்து, அவரது மூன்று வயது மகனை பிரித்தெடுத்த இந்த அமைப்பு, குறித்த அந்தகுழந்தை நிறைகுறைவாக இருந்ததாகவும், தாயின் சரியான கவனிப்பு கிடைக்காததாலேயே  அக்குழந்தை நிறை குறைந்து காணப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றியும் பெற்றதோடு, குறித்த அந்தக்குழந்தையை தாயின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் இன்னொரு குடும்பத்திற்கு தத்தும் கொடுத்திருந்தது. 

நோர்வேயின் நீதித்துறையில் கிடைத்த ஏமாற்றத்தை தொடர்ந்து, பிரான்சின் “ஸ்ட்ராஸ்பேர்க்” கிலுள்ள ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் பார்வைக்கு 2015 ஆம் ஆண்டில்  கொண்டு செல்லப்பட்ட இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, கடந்த 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டபோது, குறித்த இந்த விடயத்தில் மனிதவுரிமைகள் மீறப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம், குறித்த அந்த வழக்கு தொடர்பாக நோர்வே மீது கடும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக, மேற்படி வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலப்பகுதியில், நோர்வே பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த தகவலே இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு பிரதான காரணமாக இருந்துள்ளது. “Dagbladet” என்ற அந்த பிரபல பத்திரிகையானது, குறித்த இந்த மூன்று வயதுக்குழந்தை தாயிடமிருந்து பிரித்தெடுக்கப்படுவதற்கு பொறுப்பாகவிருந்த அதிகாரியும், பின்னதாக அக்குழந்தை தத்து கொடுக்கப்பட்ட பெண்ணும் நெருங்கிய சிநேகிதிகளாக இருந்ததை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த பத்திரிகை செய்தியானது வழக்கின் பிரதான வாதங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டபோது அதனை கவனத்திலெடுத்த நீதிபதிகள், குழந்தையின் தாய்க்கு சார்பாக தீர்ப்பை வழங்கியதோடு, குறித்த மனிதவுரிமைமீறல் தொடர்பாக விளக்கமளிக்குமாறும் நோர்வே அரச சட்டத்தரணிக்கு பணிப்புரையும் விடுத்துள்ளனர்.

மேற்படி வழக்கில் பெற்றோருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, ஏற்கெனவே நோர்வே நீதித்துறையால் பரிசீலிக்கப்பட்டு எதிர்மறையான தீர்ப்புக்களே கிடைக்கப்பெற்ற மேலும் பல குடும்பங்கள் தமது வழக்குகளையும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இதுவரை சுமார் 34 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் மேற்படி “Barnevern” நிறுவனத்துக்கெதிரான 16 வழக்குகள் தொடர்பாக விளக்கங்கள் நோர்வே அரசிடம் கேட்கப்பட்டுள்ளன. 

மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதன்மை நாடாக சர்வதேசத்தில் அறியப்பட்ட நோர்வேயின் நற்பெயருக்கு மேற்படி வழக்குகள் களங்கத்தை ஏற்படுத்திவிடுமென கலங்கும் நோர்வே அரசு, ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றமானது குறித்த வழக்குகள் தொடர்பில் மேலெழுந்தமான கருத்துக்களையே கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளதோடு, இது விடயமாக ஆராய்வதற்கு சட்டவாளர்கள் குழுவொன்றையும் நியமித்திருப்பதாகவும் தெரிகிறது.

எனினும், காலங்காலமாக பழமைவாதத்திலேயே ஊறிப்போன மனோதத்துவ நிபுணர்களின் விதந்துரைகளின் அடிப்படையில் அமைந்த குடும்பநல சட்டங்களை பின்பற்றும் மேற்படி “Barnevern” அமைப்பானது, நவீன காலத்திற்கும், தற்போதைய வாழ்வியல் முறைகளுக்கும் ஏற்றவிதத்திலான சட்ட மாற்றங்களை பரிசீலிக்க வேண்டுமென்ற கருத்தையே ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் முன்னால் அணிவகுத்து நிற்கும் நோர்வேயின் குடும்பநல வழக்குகள் சுட்டி நிற்கின்றன என்ற கருத்துக்களும் இப்போது மக்கள் மத்தியில் மேலோங்கி வருகின்றன.

பகிர்ந்துகொள்ள