நோர்வேயின் கிழக்குப்பகுதியில் மண்சரிவு!

You are currently viewing நோர்வேயின் கிழக்குப்பகுதியில் மண்சரிவு!

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவை அண்டிய புறநகர் குடியிருப்பான “Gerdrum” பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 14 வீடுகள் நாசமாகியிள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மேம்பாடு:

13:45

இறுதித்தகவல்களின்படி, மீட்ப்புப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், நிலச்சரிவு தொடர்ந்து வருவதாகவும், சுமார் 500 பேர்வரை பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வசித்த 26 பேருடைய நிலை பற்றி தெரியவில்லையெனவும் தெரியவருகிறது.

https://www.vgtv.no/210590?jwsource=cl

குறித்த பகுதியில் வசிக்கும் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, இன்று, 30.12.2020 அதிகாலை 04:00 மணியளவில் ஏற்படத்தொடங்கிய நிலச்சரிவில், மயிரிழையில் தான் தப்பித்துக்கொண்டதாகவும், குறித்த குடியிருப்பு பகுதி, கடல், மற்றும் சதுப்பு நிலங்களை நிரவி குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டிருந்த பகுதி என்பதால், நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், நிலச்சரிவு ஏற்பட்டிருந்த இடம், பெரும் பள்ளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அதே பகுதியில் சுமார் 100 – 150 வருடங்களுக்கு முன்னதாகவும் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததாக கூறும், நோர்வே புவியியல் ஆய்வு மையம், கடலை நீரவியும், சதுப்பு நிலத்தை மேவியும் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கேற்ற விதத்தில் நிலத்தின் மேற்பகுதி உறுதியாக்கப்பட்ட பின்பே குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், எனினும், உறுதியாக்கப்பட்டுள்ள நில மேற்பரப்பை பாதிக்கக்கூடியளவில் கடுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது, அதன் கீழாக இருக்கும் சதுப்பு நிலத்தில் அசைவுகள் ஏற்பட்டாலோ நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும், தற்போது ஏற்பட்ட நிலச்சரிவுக்கு சரியான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும், அதிகமான மழை காரணமாக, நிலத்தை ஊடறுத்து சென்ற மழைநீர், சந்திப்பு நிலத்தின் கனதியை இளக்கியிருந்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அண்டியுள்ள சில இடங்களில் இம்மாத ஆரம்பத்தில் சிறியளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலச்சரிவு மிக மோசமானதாக கருதப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள