“ஐ.எஸ்” அமைப்போடு தொடர்புபட்டவர்களால் நோர்வேயில் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதலொன்று, நோர்வே காவல்துறையின் பாதுகாப்பு பிரிவினரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
04.02.2021 அன்று நோர்வேயில் வைத்து கைது செய்யப்பட்ட 16 வயதுடைய, சிரிய பின்னணியைக்கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, நடக்கவிருந்த அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் இப்போது வழக்கு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை பாதுகாப்பு பிரிவினர், இளைஞருக்கு எதிரான பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
- வெடிபொருட்கள் தயாரிப்பு தொடர்பில் இணையவழி கற்கைநெறி பெற்றுக்கொண்டமை…
- வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பிலும், அவற்றை வெடிக்க வைப்பது தொடர்பிலும், பணயக்கைதிகளை சிறைப்பிடிப்பது தொடர்பிலும், அவர்களை கொலை செய்வது உட்பட, வெவ்வேறு விதமான நச்சுப்பொருட்கள் மற்றும் அவற்றின் தொழிற்பாடு போன்ற ஆவணங்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டமை…
- “Google” தேடுதளம் மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட தகவல்களை தேடியறிந்து கொண்டமை…
- நோர்வேயில் அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்கள், மற்றும் இரவு விடுதிகளின் அமைவிடங்கள் பற்றிய தரவுகளை தேடி அறிந்து கொண்டமை…
- “ஐ.எஸ்.” அமைப்புக்கான தனது சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டதோடு, அந்த அமைப்பின் பரப்புரைகளை மேற்கொள்ளும் இணையத்தளத்துக்கு நிதியுதவி செய்துள்ளமை…
- “ஐ.எஸ்.” அமைப்பின் கொள்கைகளையும், காணொளி பரப்புரைகளை ஏனைய சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு, அவ்வமைப்பின் இரகசிய சந்திப்புக்களில் பங்கு பற்றியிருந்தமை…
உள்ளிட்ட குற்றங்கள், குறித்த சிரிய இளைஞருக்கெதிராக நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விளைஞர் 04.02.2021 அன்று கைது செய்யப்பட்டதோடு, மேற்படி இளைஞரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, அவரால் நோர்வே மண்ணில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக, அரச வழக்கறிஞர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நோர்வேஜிய மொழியில் பரிச்சயமேதுமில்லாத அவ்விளைஞர், காவல்துறை விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனவும், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சட்டுக்களை அவர் மறுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சிரிய இளைஞர் 18 வயதுக்கு குறைந்தவராகையால் நோர்வே சட்டங்களின்படி அவர் “சிறுவர்” என்ற வரைமுறைக்குள் அடங்குவதால், பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவிருந்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள கூடாதெனவும், அவரது இளவயது காரணமாக இவ்வழக்கு விசாரணைகள் இரகசியமாக நடைபெற வேண்டுமெனவும் குறித்த இளைஞருக்காக வாதாடும் சட்டவாளர் நீதி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை இரகசியமாக நடத்த நீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரகசியமாக நடத்தப்படும் இவ்வழக்கு விசாரணைகளில் பார்வையாளர்களோ அல்லது செய்தியாளர்களோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், செய்தியாளர்கள் இவ்வழக்கு விசாரணைகளை இணையவழியாக அவதானிக்க முடியும் என்றும் எனினும், வழக்கின் மிக முக்கிய விடயங்கள் குறித்த குறிப்புக்களை எடுத்துக்கொள்வதற்கு செய்தியாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. நீதிமன்றத்தின் இம்முடிவை எதிர்த்து நோர்வேயின் செய்தியாளர்கள் ஒன்றியம் மேன்முறையீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி: