நோர்வேயின் கோழிப்பண்ணைகளில் வருடாந்தம் சுமார் 3 மில்லியன் கோழிக்குஞ்சுகள், உயிரோடு இயந்திரத்தில் போட்டு அரைக்கப்பட்டு அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இனவகையை சேர்ந்த ஆண் கோழிக்குஞ்சுகள், முட்டையிலிருந்து அவை வெளிவந்ததும் 24 மணி நேரத்துக்குள்ளாக இனம் காணப்பட்டு, மிக வேகமாக சுழலும் கத்திகளை கொண்ட இயந்திரத்தில் போட்டு அரைக்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
உணவுத்தேவைக்காக உயிரினங்கள் கொல்லப்படும்போது, அவற்றுக்கு வலி தெரியாமலிருக்க, முதலிலேயே அவை மயக்கப்பட்டு பின் கொல்லப்படுவது, அல்லது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவை வலியை உணர முடியாதபடி கொல்லப்படுவது ஆகிய முறைமைகள் நோர்வேயில் கட்டாயமாக இருக்கும் நிலையிலும், பிறந்த கோழிக்குஞ்சுகள் இவ்வாறு இயந்திரத்தில் போட்டு அறுக்கப்படும் செய்தி, மக்களிடையே விசனத்தை உண்டாக்கியுள்ளது.
எனினும், கோழிக்குஞ்சுகள் போட்டு அரைக்கப்படும் இயந்திரத்தில் உள்ள கத்திகள் மிக வேகமாக சுழல்வதால், கோழிக்கு ஞ்சுகள் வலியை உணர முன்னதாகவே கொல்லப்பட்டுவிடுகின்றன என்பதாலேயே, இம்முறைமைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி இயந்திரம், ஒரு கோழிக்குஞ்சை, ஒரு செக்கன் நேரத்தில் சுமார் 15 தடவைகள் வெட்டித்தள்ளும் தன்மை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொல்லப்படும் குறிப்பிட்ட வகையான ஆண் கோழிக்குஞ்சுகள் மிகக்குறைந்த இறைச்சியையே தருவதால், அவற்றை பாவனையாளர்கள் விரும்பி வாங்குவதில்லை என்பதாலேயே அவை இவ்வாறு அழிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.