நோர்வேயின் தொழிநுட்பத்தில் தயாரிக்கப்படும் வான்வழி தாக்குதல் பாதுகாப்புத்தொகுதியை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. “G7” நாடுகளின் சந்திப்பின்போது அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகிறது.
முழுவதும் நோர்வேயின் தொழிநுட்பத்தில், நோர்வேயின் பிரபலமான ஆயுத உற்பத்தி நிறுவனமான “Kongsberg Defence & Aerospace” நிறுவனத்தினால் அமெரிக்க நிறுவனமான “Raytheon” உடன் இணைந்து தயாரிக்கப்படும் மேற்படி வான்வழி தாக்குதல் பாதுகாப்புத்தொகுதி, அமெரிக்க வெள்ளைமாளிகை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் சபை கட்டிடம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது எனவும் மேலும் குறிப்பிடப்படும் அதேவேளை, “NASAMS” என சுருக்கமாக குறிப்பிடப்படும், “Norwegian Advanced Surface to Air Missile System” என்ற பெயர்கொண்ட மேற்படி வான்வழி தாக்குதல் பாதுகாப்பு தொகுதி உலகளவில் புகழ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் பிரதேசங்கள் படிப்படியாக ரஷ்யாவிடம் வீழ்ச்சி காணும் நிலையில், அமெரிக்க மாற்றும் பிரித்தானியா, நோர்வே உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளால் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இப்போது அமெரிக்க அதிபரின் இவ்வறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேவேளை, தன்னிடம் ஆயுதங்களை வாங்கும் நாடுகள், அவ்வாயுதங்களை வேறு நாடுகளுக்கு, குறிப்பாக போர்ச்சூழ்நிலையில் இருக்கும் நாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே நோர்வேயின் ஆயுத விற்பனை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.