08.03.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13:00 மணிக்கு நோர்வே Oslo Youngstorget இல் அனைத்துலகப் பெண்கள் நாள் ஆரம்பமாகியது.
இந்த ஒன்றுகூடலிலும் ஊர்வலத்திலும் பல்லாயிரக்கணக்கான நோர்வேயிய மக்களுடன் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியும் பதாகைகளைச் சுமந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பும் வழமை போல் இம்முறையும் தமது தாயகத் தமிழ்மகளிரின் இன்னல்களை வெளிப்படுத்தியுள்ளது.
எமது தமிழ்ப் பெண்கள் தாயகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆட்சிகள் மாற்றம் அடைந்த பிற்பாடும் சிங்களதேசம் மனித நேயத்தை நிலைப்படுத்தியுள்ளதாக மேற்குலகை ஏமாற்றித் தன் வழமையான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையை மாற்றியமைக்கவும் சிங்களத்தின் முகத்திரையைக் கிழிக்கவும் இப்போராட்டங்கள் மிகவும் பலமாக அமையும் என்பதில் ஜயம் இல்லை. தொடர்ந்து எம் இனத்தின் விடிவிற்காகக் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தலையாய கடமையாகும்.
இன்று, நோர்வே தமிழ் மகளிர் அமைப்பு துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் பதாகைகள் மூலமும் தாயகப்பெண்களின் அவல நிலை – மறுக்கப்பட்ட வாழ்வுரிமை – காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நியாயமான தீர்வுகிடைக்க வேண்டும் என்பவை வெளிக்காட்டப்பட்டது.
இவை மட்டுமல்லாது ஜக்கிய நாடுகள் சபையானது சிறிலங்காவின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சிறிலங்காவைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.