2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள, நோர்வேயின் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet / AP) சார்பில், தலைநகர் ஒஸ்லோவில் போட்டியிடக்கூடிய கட்சி உறுப்பினர்களின் உத்தேச பட்டியலை அக்கட்சியின் ஒஸ்லோ பிரிவு வெளியிட்டுள்ளது.
குறித்த உத்தேச வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பு தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தேச வேட்பாளர் பட்டியல் திருப்திகரமானதாக இல்லையெனவும், கட்சி அமைப்பின் கொள்கைகளை புறந்தள்ளியதாக அமைந்துள்ளதாகவும் கட்சியின் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தலைநகர் ஒஸ்லோவை பொறுத்தவரை கட்சியின் வேட்ப்பாளர் பட்டியலில் முதல் 5 இடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். அந்த வகையில், ஒஸ்லோவின் உத்தேச வேட்பாளர் பட்டியலின் முதல் 5 இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை தட்டிச்செல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கட்சியின் நட்சத்திர உறுப்பினர்கள் என கருதப்பட்ட “Espen Barth Eide” மற்றும் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட “கம்சாயினி குணரத்தினம் (Kamzy Gunaratnam)” ஆகிய இருவரும் உத்தேச வேட்பாளர் பட்டியலில் பின்தள்ளப்பட்டிருப்பது, அவர்கள் இருவருக்கும் மட்டுமல்லாது, கட்சி பிரமுகர்களிடையேயும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
“கம்சாயினி குணரத்தினம்” தற்போது, அவரது கட்சியின் சார்பில், ஒஸ்லோ நகரத்தின் துணை மேயராக பொறுப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. உத்தேச வேட்பாளர் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு “கம்சாயினி குணரத்தினம்” பரிந்துரைக்கப்பட்டாலும், தெரிவுக்குழு உறுப்பினர்களின் குறைவான ஆதரவினாலேயே இவர் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படும் அதேவேளை, கட்சியின் இன்னொரு பிரமுகரான “Trine Lise Sundnes” என்பவருக்கு அதிக ஆதரவு தெரிவுக்குழுவுக்குள் இருப்பதால், அவர் 4 ஆவது இடத்தை பெற்று, “கம்சாயினி குணரத்தினம்” 5 ஆவது இடத்துக்கு தள்ளப்படும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதேவேளை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர உறுப்பினர் “Espen Barth Eide”, உத்தேச வேட்பாளர் பட்டியலிலேயே இடம்பெறவில்லையெனவும் குறிப்பிடப்படுகிறது.
மேற்படி உத்தேச வேட்பாளர் பட்டியல், கட்சியின் ஒஸ்லோ பிரிவுகளுக்கும், இளைஞர் பிரிவுக்கும் ஆலோசனைகளுக்காக அனுப்பப்பட இருக்கும் நிலையில், கட்சியின் நட்சத்திர உறுப்பினர்களாக கருதப்படும் “Espen Barth Eide” மற்றும் “கம்சாயினி குணரத்தினம்” ஆகிய இருவரும் முதல் 5 வேட்பாளர்களில் உயர் நிலைக்கு கொண்டுவரப்படுவதற்கு கட்சித்தலைமை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உத்தேச வேட்பாளர் பட்டியல் தெரிவுக்குழுவின் தலைவரான “Tone Tellevik Dahl” கருத்துரைக்கையில், தெரிவுக்குழு, நேர்மையாகவும், சரியாகவும் தனது பணிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, வேட்பாளர்களின் பெயர்கள் தெரிவின்போது, ஏகமானதாகவே அனைத்தும் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், பட்டியலில் “கம்சாயினி குணரத்தினம்” 2 வது இடத்தை பெறவேண்டுமென கட்சியின் பிரதானமானவர்கள் பரிந்துரைத்திருந்தபோதும், தெரிவுக்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி, “கம்சாயினி குணரத்தினம்” பெற்றிருக்க வேண்டிய 2 வது இடம் “Zaineb Al-Samarai” என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டதாகவும், 4 வது இடத்தை”Tone Tellevik Dahl” அல்லது “கம்சாயினி குணரத்தினம்” பெற்றுக்கொள்ளும் விடயத்தில் மட்டுமே கருத்து வேற்றுமை உள்ளதாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு உடனடியாக கருத்தேதும் தெரிவிக்காத “கம்சாயினி குணரத்தினம்”, உத்தேச வேட்பாளர் பட்டியலில் உரிய இடம் தனக்கு வழங்கப்படாமை தனக்கு மகிழ்வான விடயமாக அமையவில்லை எனக்குறிப்பிட்டுள்ளதோடு, கட்சியின் இறுதி முடிவே நிரந்தரமானது எனவும், எதிர்வரும் வாரங்களில் தனது பெயர் அதிகமான கவனத்தை பெறவிருக்கும் நிலையில், அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள இருப்பதாகவும், தனது “Facebook” பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்: