நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் சுவீடனின் சிறப்பு அணியொன்றும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவின்போதான மீட்ப்புப்பணிகளில் சிறப்புத்தகமை பெற்றிருக்கும் மேற்படி சுவீடனை சேர்ந்த குழுவினருக்கு, “Gerdrum” அனர்த்த மீட்ப்புப்பணிகளுக்கு உதவும்படி நோர்வே விடுத்திருந்த அழைப்பையடுத்து உடனடியாக களத்துக்கு விரைந்த சுவீடன் அணியினரை சேர்ந்த ஒருவர் குறிப்பிடும்போது, இவ்வாறான மிகமோசமான அனர்த்தங்களின் போது எப்படி செயற்படவேண்டுமென சிறப்பு பயிற்சிகளை தாம் பெற்றிருந்தாலும், நோர்வேயில் தற்போது அனர்த்தம் ஏற்பட்டுள்ள இடத்தை வந்தடைகின்றபோது, அனர்த்தத்தின் கொடுமை தமக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மீட்ப்பு நடவடிக்கைகளுக்காக தாம் நிலத்தில் புதையுண்ட பகுதிக்குள் இறங்கியபோது, சில இடங்களில் சதுப்புநிலம் திரவ நிலையில் இருந்ததால், அதில் கால் வைப்பது உயிராபத்தானதாக இருந்ததாகவும், எனினும் தகுந்த உபகரணங்களை வைத்து, தாம் செயலில் இறங்கியதாக தெரிவிக்கும் இவ்விசேட அணியினர், மீட்ப்பு நடவடிக்கைகளின்போது எந்நேரமும் அபாய நிலை தோன்றலாமென்ற நிச்சயமற்ற சூழ்நிலையிலேயே தாமும், நோர்வே அணியினரும் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.
“Urban Search And Rescue Team /USAR” என்ற, சுவீடனின் விசேட அணியினரின் உதவியுடனேயே அனர்த்த இடத்திலிருந்து முதலாவது சடலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காவல்துறையின் மோப்பநாய்களில் இரண்டு நாய்கள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டபோது, அவை காயமடைந்துள்ளதாகவும் சிகிச்சைகளுக்காக அந்த நாய்கள் மிருக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.