நோர்வே வெளியுறவு அமைச்சகத்தை விசாரிக்கும்படி கோரி, நோர்வே நாடாளுமன்றத்துக்கு முறைப்பாட்டுக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவமொன்றின் குற்றவாளி எனக்கருதப்படும் ஒருவரை கைது செய்வதிலும், குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில், கொலையுண்டவரின் குடும்பத்தினருக்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே வெளியுறவு அமைச்சகம் தவறிவிட்டது எனவும், அதனால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தை விசாரிக்கவேண்டுமெனவும் கோரி, இம்முறைப்பாடு நோர்வே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டவரான “Martine Vik Magnussen” என்ற யுவதி, லண்டன் மாநகரில் நிலவறையொன்றில் வைத்து 2008 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டிருந்தார். 13 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் முடிவு காணப்படாமல் இருக்கும் இக்கொலையை புரிந்தவரென்ற சந்தேகத்தில் ஒரேயொருவர் மீது மட்டுமே இதுவரை குற்றம் சட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொலையை புரிந்தவரென சந்தேகிக்கப்படும், “Farouk Abdulhak” என்றழைக்கப்படும், “Yemen / யேமென்” நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்கும் இளைஞர், “Yemen / யேமென்” நாட்டில் மறைந்திருப்பதாகவும், பெரும் செல்வந்தக்குடும்பத்தை சேர்ந்த குறித்த இளைஞர், தனது பொருளாதார செல்வாக்கால் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் தப்பித்து வருவதாகவும், கொலையுண்ட நோர்வே யுவதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேக நபரை சர்வதேச காவல்துறையின் உதவியோடு கைது செய்து விசாரிக்க வேண்டுமென கடந்த 13 வருடங்களாக போராடி வருவதாகவும், எனினும் இது விடயமாக ஆக்கபூர்வமான கருமங்களை ஆகியிருக்க வேண்டிய நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் பயன்தரக்கூடிய நடவடிக்கைகளெதையும் எடுக்கவில்லையெனவும், தமது குடும்பத்துக்கான உதவிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்யவில்லை எனவும் கொலையுண்ட யுவதியின் தந்தையார் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதோடு, வெளியுறவுத்துறையின் அசமந்தப்போக்கை நாடாளுமன்றம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதோடு, எழுத்துமூலமான கோரிக்கையையும், நோர்வே நாடாளுமன்றக்குழு தலைவரிடம் நேரடியாக கையளித்துள்ளார்.