“பசுமை” எரிபொருள் தயாரிப்பில் நோர்வே நிறுவனங்கள்! சூழல் மாசடைதல் கணிசமாக குறையும் எனவும் நம்பிக்கை!!

You are currently viewing “பசுமை” எரிபொருள் தயாரிப்பில் நோர்வே நிறுவனங்கள்! சூழல் மாசடைதல் கணிசமாக குறையும் எனவும் நம்பிக்கை!!

சூழல் மாசடைதலை கட்டுப்படுத்தும் விதத்திலான புதியவகை எரிபொருளை தயாரிக்கும் முயற்சியில் நோர்வே நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

நான்கு நிறுவனங்கள் ஒன்றிணைந்து “Norsk E – Fuel” என்ற பெயரிலான நிறுவனமூடாக ஆரம்பித்திருக்கும் இத்திட்டப்படி, “புதுப்பிக்கத்தக்க மின்சாரம் / Renewable Electricty”, நீர் மற்றும் கரியமிலவாயு என்பவற்றை, நவீன தொழிநுட்பத்தின்படி மாற்றியமைப்பதன் மூலம், சக்திவாய்ந்த எரிபொருளை தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோர்வேயின் “Telemark” பகுதியிலிருக்கும் “Posgrunn” என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்படும் புதிய ஆலையொன்றில் தயாரிக்கப்படவிருக்கும் இப்புதிய எரிபொருளிலிருந்து மிகக்குறைந்தளவு காரியமிலவாயுவே வெளியேறும் என்பதால், சூழல் மாசடைவது சுமார் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் எனவும் மேற்படி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இப்புதியா ஆலையில் தயாரிக்கப்படவிருக்கும் புதிய வகையிலான எரிபொருளானது, முதற்கட்டமாக உள்ளூர் விமானசேவைகளில் ஈடுபடுத்தப்படும் விமானங்களில் பாவிக்கப்படுமெனவும், இதற்காக வருடாந்தம் சுமார் 10 மில்லியன் லீட்டர்கள் எரிபொருள் தயாரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, 2023 ஆம் ஆண்டிலேயே இப்புதிய ஆலை முழுதான இயங்குநிலைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டப்படி எல்லாம் முறையாக சாத்தியப்படும்போது, சுமார் மூன்றுவருட காலத்தில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கும் இந்நிறுவனங்கள், புதிய எரிபொருளை பாவிப்பதால் சுமார் 2.50.000 தொன் எடையுள்ள கரியமிலவாயுக்கழிவை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும், சூழல் மாசடைவதை பெருமளவில் குறைத்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கின்றன.

இதுவிடயம் தொடர்பாக, நோர்வேயின் பசுமை இயக்கமான “Zero” என்னும் இயக்கத்தின் தலைவர் “Marius Holm” தெரிவிக்கும்போது, காரியமிலவாயுவால் சூழல் அதிகமாக மாசடையும் இக்காலகட்டத்தில், மேற்படி நிறுவனங்களின் இப்புதிய திட்டம் நம்பிக்கை தருவதாக இருப்பதாகவும், மேற்படி இப்புதிய முயற்சிக்கு தேவைப்படும் “மீள்சுழற்சி” செய்யக்கூடிய “கார்பன்” மற்றும் கரியமிலவாயு போன்றவற்றின் பாவனைக்கான அனுமதி தொடர்பான விடயங்களில் அரசு கவனமெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள