வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காணி சுவீகரிப்புத் தொடர்பான கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோர், இக்கூட்டத்திற்கு ஆளுநரால் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு இடமளிக்கமாட்டோம் என தெரிவித்து முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனையடுத்து கூட்டத்திற்கு சென்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் கூட்டம் இணையவழியில் நடத்தப்பட்டது.
இதன் போது போராட்ட இடத்துக்குச் சென்ற ஆளுநர் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
“இங்கே யாரும் கத்தக் கூடாது. என்னுடைய வேலையை எனக்குப் பார்க்கத் தெரியும். உங்கள் பிரச்சினையை மட்டும் கூறுங்கள். காணி வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை” என்று காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குத் மக்கள், “எங்களின் காணிகள் எமக்கு வேண்டும். இனியும் காணிகள் அபகரிக்கக்கூடாது என்று கோஷமிட்டுள்ளனர்”. அதனையடுத்து ஆளுநர் அங்கிருந்து சென்று விட்டார்.
தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டவாறு இருந்த நிலையிலும் முப்படையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கூட்டம் இடம்பெறுவதாக தெரியவருகிறது. இதன்போது போராட்டகாரர்களுக்கும் சிறீலங்கா காவல்துறையினருக்கம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.