இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படை அதிகாரிகளுக்கு சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அமெரிக்கா தடை விதித்திருப்பதன் மூலம் இலங்கைக்கும் அதன் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளது என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை உலகம் மறக்காது. நீதி தாமதமாகலாம் எனினும் என்றோ ஒருநாள் நீதி கிடைக்கும் எனவும் இது குறித்து ஹரி ஆனந்தசங்கரி கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று அமெரிக்கா அதன் தடைப் பட்டியலை விரிவுபடுத்தியது. அதில் இலங்கை படை அதிகாரிகள் இருவர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விரிவுபடுத்தப்பட்ட தடைப் பட்டியலில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 பேர் மற்றும் 10 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.