காசாவில் போர் நிறுத்தம் தாமதமாக அமுலுக்கு வந்துள்ள நிலையில், பணயக் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலை 8.30 மணிக்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதும், பணயக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வழங்கவில்லை என்று கூறி இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தம் செய்ய வேண்டாம் என தனது படைகளுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து நேற்றுக்காலை இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பு விடுவிக்கப்படும் பணயக் கைதிகளின் பட்டியலை வெளியிட்டதை அடுத்து, நேற்று முற்பகல் 11.15 மணியளவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் அறிவித்தார்.
இதையடுத்து,நேற்று மாலை ஹமாஸ் அமைப்பு தம்மிடம் இருந்த 3 இஸ்ரேலிய பணயக் கைதிகளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைத்தது.
24, 28, 31, வயதுடைய 3 பெண்கள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக 90 பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டு மேற்கு கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.