பணய கைதிகள் 104 பேர் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!

You are currently viewing பணய கைதிகள் 104 பேர் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் நேற்று சுமார் 400 பயணிகள் பயணித்தனர்.

பலுசிஸ்தான் மாகாணம் கூடலர் , பிரு குன்ரி நகரங்களுக்கு இடையே மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரெயிலை பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் கடத்தினர்.

சுரங்கப்பாதை அருகே மலைப்பகுதியில் ரெயிலை நிறுத்திய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந்த பயணிகள் அனைவரையும் பணய கைதிகளாக சிறைபிடித்தனர். இந்த ரெயிலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போலீசார், உளவுத்துறை அதிகாரிகளும் பயணித்துள்ளனர். அவர்களும் பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலூசிஸ்தான் கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை, எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது பாதுகாப்புப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த மோதலுக்கு நடுவே பணய கைதிகளில் 104 பயணிகளை பாதுகாப்புப்படை பத்திரமாக மீட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 58 ஆண்கள், 31 பெண்கள், 15 குழந்தைகள் ஆவர். முன்னதாக சில பணய கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கிளர்ச்சியாளர்கள் வசம் 200க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க பாதுகாப்புப்படையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போதும் பாதுகாப்புப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply