சூரிச்சில் இருந்து வியன்னாவுக்குச் சென்ற LX1578 இலக்க சுவிஸ் விமானம் நேற்று முனிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேற்று மதியம் 12.30 மணியளவில், சுவிஸ் விமானம் LX1578 சூரிச் விமான நிலையத்திலிருந்து வியன்னாவிற்கு புறப்பட்டது.
விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.
திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பின்னர், அந்த விமானம் பவேரிய தலைநகரான முனிச்சில் அவசரமாக தரையிறங்கியது.
விமானத்தின் முன்பகுதியில் இருந்து அசாதாரணமான துர்நாற்றம் வீசியதை அடுத்தே பாதுகாப்புக் கருதி விமானிகள் முனிச்சில் தரையிறக்கினர்.
அதையடுத்து துணை மருத்துவர்கள் பயணிகளை பரிசோதித்தனர். விமானமும் தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை
சூரிச் – டெல் அவிவ் இடையிலான விமான சேவை இடைநிறுத்தம், ஆகஸ்ட் 12 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, கடந்த வாரம் இஸ்ரேலுக்கான விமானங்களை சுவிஸ் நிறுவனம் இடைநிறுத்தியது.
அங்குள்ள நிலைமையை மேலும் ஆய்வு செய்த பின்னர், இந்த விமான சேவை இடைநிறுத்தத்தை நான்கு நாட்களுக்கு நீடிக்க நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓகஸ்ட் 7 ஆம் திகதி புதன்கிழமை வரை சுவிஸ் விமானங்கள் ஈரானின் வான்வெளியை முற்றிலுமாகத் தவிர்க்கும் என்றும் சுவிஸ் விமான நிறுவனம் அறிவித்தது.
இஸ்ரேல் மற்றும் ஈராக் மீதான வான்வெளி கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
பெய்ரூட்டுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த இடைநிறுத்தமும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை நீடிக்கும்.