பதினான்கு தமிழ்ப் பிள்ளைகளின் உயிரைக் குடித்த ‘நீட்’ தேர்வு இனி தமிழ்நாட்டிற்கு வேண்டவே வேண்டாம்!!

You are currently viewing பதினான்கு தமிழ்ப் பிள்ளைகளின் உயிரைக் குடித்த ‘நீட்’ தேர்வு இனி தமிழ்நாட்டிற்கு வேண்டவே வேண்டாம்!!

பதினான்கு தமிழ்ப் பிள்ளைகளின் உயிரைக் குடித்த ‘நீட்’ தேர்வு இனி தமிழ்நாட்டிற்கு வேண்டவே வேண்டாம்.
நீதியரசர் ஏ.கே.இராசன் அவர்களுக்கு
வ. கௌதமன் கடிதம்.

ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, பட்டியல் வகுப்பு மற்றும் மலைவாழ் பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை ‘நீட்’ என்கிற எமன் நிர்மூலமாக்குவதால் ஒருபோதும் நீட் தேர்வினைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என,
தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராயும் மாண்புமிகு நீதியரசர் குழுவிற்கு வேண்டுகோள் வைக்கிறேன். மேலும் நீட் என்கிற தேர்வு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய ஒன்றியம் முழுக்கவே நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்துகிறேன்.

அதற்கான காரணங்கள்:

  1. நீட் என்கிற எமனுக்கு இதுவரை குழுமூர் அனிதா,
    பெருவாளூர் பிரதீபா,
    மதுரை ஜோதி துர்கா,
    தர்மபுரி ஆதித்யா,
    எலந்தங்குழி விக்னேஷ் ,
    சென்னை ஏஞ்சலின்,
    திருவள்ளூர் ஸ்ருதி,
    திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சை வைஷியா, கோவை சுபஸ்ரீ, நெல்லை தனலெட்சுமி உட்பட பதினான்கு பிள்ளைகளும் பன்னிரண்டாம் வகுப்பில் தகுதிமிக்க மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். ஆகையினால் நீட் தேர்வு வேண்டாம்.

2.பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்ட முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பினை மறுக்கும் நீட் தேர்வு வேண்டாம்.

3.பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண்களே ஒரு மாணவரின் அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறது. அப்படி இருக்க இன்னொரு தேர்வு முறையான நீட் தேர்வு தேவையில்லை.

4.படிப்பறிவில்லாத கிராமப்புற பெற்றோர்களாலும், சில நேரங்களில் மாணவர்களாலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புவதே கடினமாக இருக்கிறது. சிறு தவறு நேர்ந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எனவே நீட் தேர்வு வேண்டாம்.

  1. நீட் முறைப்படி குறைந்த தகுதி மதிப்பெண் பெற்ற மாணவரும் கூட, அவரால் பல இலட்சம் கல்லூரிக்கட்டணம் கட்டணம் கட்ட முடிந்தால் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கிறது. பணம் கட்ட முடியாத ஏழை மாணவர் அதிக தகுதிக்குரிய மதிப்பெண் பெற்றிருந்தாலும் இடம் கிடைப்பதில்லை. எனவே நீட் தேர்வு வேண்டாம்.
  2. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர், சிறப்பு பயிற்சி பெற‌ வாய்ப்பின்றி, நீட் தேர்வில் தோல்வியுற்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மன நோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே நீட் தேர்வு வேண்டாம்.
  3. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுக்கும் நீட் தேர்வு வேண்டாம்.
  4. பல வகையான சமூக பொருளாதார கல்வி நிலை உள்ள ஒரு நாட்டிற்கு ஒரே வகையான தேர்வு நியாயமற்றது. அந்தந்த மாநிலத்திற்கு சரியான தேர்வு முறையை நடைமுறைப்படுத்தும் உரிமை மாநில அரசுக்கு வேண்டும். எனவே நீட் தேர்வு வேண்டாம்.
  5. மருத்துவப் படிப்பில் கையூட்டு உட்பட பலவித முறைகேடுகளுக்கும் நீட் தேர்வு வழிவகை செய்கிறது. எனவே நீட் தேர்வு வேண்டாம்.
  6. தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பினைக் குறைக்கும் நீட் தேர்வு வேண்டாம்.

11.பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வு அளிக்கிறது. பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலாக மருத்துவத்துறையை மாற்றும் நீட் தேர்வு வேண்டாம்.

  1. சமூக நீதியினை சிதைத்து, இட ஒதுக்கீட்டினைக் குழிதோண்டிப் புதைக்கும் நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்.
  2. வெவ்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்கள் பயின்று வரும் போது, அவர்களுக்கு ஒரே மாதிரியான தகுதித்தேர்வு என்பது சமூக அநீதி.
  3. உலக அளவிலும், இந்திய ஒன்றிய அளவிலும், மருத்துவக் கட்டமைப்பிலும், மருத்துவர் உருவாக்கத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் வடிவத்தையே ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும்.
    மாறாக இதைக் குழிதோண்டிப் புதைக்கும் நீட் தேர்வு முயற்சியை நிரந்தரமாக கைவிட வேண்டும்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
23.06. 2011

பகிர்ந்துகொள்ள

Leave a Reply