இலங்கையின் அதிபர் கோட்டபாய ராஜபக்ஸ இலங்கையை விட்டு வெளியேறிய நிலையில், அதிபரின் பணிப்புரையின்பேரில், பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பதில் அதிபராக பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அதிபர் பதவியை துறப்பதாக அதிபர் கோட்டாபய இன்னமும் உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில் அதை எதிர்த்தும், பதில் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமையை எதிர்த்தும் தென்னிலங்கை முழுவதும் மீண்டும் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலகம், இலங்கை அரச தொலைக்காட்சியான “ரூபவாஹினி” மற்றும் சுயாதீன ஊடக நிறுவனங்களையும் தமது கட்டுப்பாட்டில் போராட்டக்காரர்கள் கொண்டுவந்திருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்றமும் முற்றுகையிடப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென போராட்டக்காரர்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமையும் நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, அதிபர் பொறுப்பிலிருந்து 13.07.22 அன்று விலகுவதாக அதிபர் கோட்டாபய அறிவித்திருப்பதாக இலங்கை மற்றும் சர்வதேச செய்தியூடகங்கள் அறிவித்திருந்த நிலையில், இதே நாளில் கோட்டாபய பொறுப்பு விலகாவிடில் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பதில் அதிபராக ரணில் பொறுப்பேற்றதும் தன்னிலங்கையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, அவசரகாலச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, சட்டம் / ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படைகள் களமிறக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளதையடுத்து, தென்னிலங்கையில் அங்கங்கே போராட்டக்காரர்கள்மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை ஏவிவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நேற்று அதிகாலை இலங்கையைவிட்டு மாலைதீவுக்கு தப்பிச்சென்ற அதிபர் கோட்டாபய, மாலைதீவில் அவருக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியிருப்பதால் அங்கிருந்து விரைவாக சிங்கப்பூருக்கு தப்பியோட முற்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், கோட்டாபய சிங்கப்பூருக்கு வரும் நிலையில், அங்கும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்த மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளும் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.