இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்க வேண்டும் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு கோரி சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தல், நீதிமன்றங்களில் முன்னிறுத்தப்படாமல் நீண்ட காலம் தடுத்து வைத்தல், நீண்ட கால விசாரணைகள் போன்றவற்றால் பல கைதிகள் மற்றும் அவர்களின் உறவுகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 48 ஆவது கூட்டத் தொடரை கருத்தில் கொண்டுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. இது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச சமூகதின் மத்தியில் இருந்து இந்த விவகாரத்தை தற்காலிமாக மறைக்கும் முயற்சியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கான மீளாய்வின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான இலங்கையில் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்ய வேண்டும் எனவும் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு வலியுறுத்தியுள்ளது.