அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் நேற்று ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் சிவில் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் நேற்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேரூந்து வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அது ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் எனவே குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றப்படுவதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தவே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது ஊடகங்களை அடக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பாராளுமன்ற உறுப்பினர்களே ஜனநாயத்திற்கு எதிராக சட்டத்தை ஆதரிக்காதீர்கள், ஜனநாயகத்தை பாதுகாக்கவே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஒடுக்குவதற்கு அல்ல,புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு சாவுமணி, மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளி ஜனநாயகத்தை பலப்படுத்து போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத
இப் போராட்டத்தில் வடக்கில் உள்ள ஊடக அமைப்புக்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தென்னிலங்கை ஊடக தொழிற் சங்கம் என்பன கலந்துகொண்டிருந்தன.