உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த யோசனைகளை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தம்மிடம் கையளித்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அத்திருத்த யோசனைகளில் மரணதண்டனை வழங்கலை நீக்கவேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சகல தரப்பினரதும் யோசனைகளுக்கு அமைய அவசியமானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமிருந்தும் திருத்த யோசனைகள் கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே அதன் யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஏற்கனவே அறிவித்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் குறித்து அவர்களிடம் விளக்கமளித்து வருகின்றார்.
இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய சில திருத்த யோசனைகளை ஐரோப்பிய ஒன்றியம் தம்மிடம் கையளித்திருப்பதாகக் கேசரியிடம் தெரிவித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மரண தண்டனையை நீக்கவேண்டும் என்ற விடயம் அந்த யோசனைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகவும், இதுகுறித்து எதிர்வரும் மேமாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாகவும் அறியமுடிகின்றது.