இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக் லெவின், மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தொடரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகம் மற்றும் அதன் கீழான மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாக கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மேற்குறிப்பிட்டவாறான கருத்தை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டமானது போராட்டக்காரர்களை அமைதிப்படுத்துவதற்கும், நபர்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று மைக் லெவின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய வகையிலேயே காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், எனவே அச்சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.