பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்!

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்!

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று  தடைபட்டியலில் அதிகமான அப்பாவி மாணவர்கள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால் இதுதொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது ஜனாதிபதி எதிர்பார்க்கும் நாட்டின் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பாரிய சவாலாக அமையும். இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியும், அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்கும் தீர்மானத்திற்கு கையெழுத்திடுவதும் சவாலானது.

நீங்கள் சர்வதேசத்திற்கு வழங்கும் செய்தி இதுவா என்று கேட்க விரும்புகின்றேன். ஜனாதிபதி தனது இந்தப் போக்கை மாற்றியமைத்து இந்த விடயத்தை மீளாய்வு செய்து வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் என்று நினைக்கின்றேன்.

இதேவேளை சில நபர்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 156பேரும் 6அமைப்புகளும் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் அப்பாவி நபர்களும் உள்ளனர். அப்பாவி மாணவர்கள் பலர் உள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகள் சாட்சிகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் செய்யப்பட்டவையா என்று கேட்கின்றோம்.

நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு இதுதொடர்பாக மீள் பரிசீலனை செய்யவேண்டும்.  அத்துடன் இந்த தடைப்பட்டியலில் உள்ளவர்களுக்கு பயங்கரவாத விசாரணை பிரிவினர், குற்ற ஒப்புதல் மேற்கொள்ள அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

இதுதொடர்பில் அவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். அதனால் அப்பாவிகளை தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 

அத்துடன் மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக மத ஸ்தானங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 180 அலகுகள் பாவித்தால் தற்பேதுள்ள கட்டணத்தைவிட 700 மடங்கு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply