பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!!

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!!

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் எதற்காக இயற்றுவதற்கு முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்களை அடக்குமுறைக்குட்படுத்தியதோடு, அரசியல் ரீதியாகவும் பழிவாங்கியது.அவ்வாறான நிலையில் ஆட்சியில் உள்ள அரசாங்கமும் புதிய அரசாங்கமும் அவ்வாறு செய்வதற்கே முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை இயற்றுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பொதுமக்களின் அபிப்பிராயத்தினை பகிரங்கமாகக் கோரியுள்ளது. இந்நிலையில், அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு,

கஜேந்திரகுமார் பொன்னம்பம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கோரிவருகின்றோம். எனினும் அந்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுலாக்கப்பட்டே வருகின்றது.

விசேடமாக குறித்த சட்டத்தின் மூலமாக தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததோடு போரின் பின்னரான சூழலில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனைத் தாண்டிச் செயற்படுபவர்கள் மீது திட்டமிட்டு பயங்கரவாதச் சட்டம் பாய்கின்ற நிலைமை தான் உள்ளது.

ஆகவே நாம் இந்தச் சட்டத்தினை முழுமையாக நீக்குமாறே கோருகின்றோம். இலங்கையில் ஏற்கனவே காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் போதுமானவையாக உள்ளன. ஆகவே அச்சட்டங்களை பயன்படுத்துவதற்கு மேலதிகமாக புதிதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டுவர வேண்டிய தேவைகள் எதுவுமில்லை.

அந்தவகையில், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளமையானது, அதன்மீதூன சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. அநுர அரசாங்கமும், அடக்குமுறைகளைச் செய்வதற்கே முனைகின்றது என்றே வெளிப்படுகின்றது.

ஆகவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய சட்டத்துக்கு நாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. அதேபோன்று நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு உள்ளுர், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் புதிய சட்டத்தினை அரசாங்கம் கொண்டுவருகின்றமையானது அதனுடைய எதிர்காலப்போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது என்றார்.

எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலீடாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அந்தச்சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கம் கலந்துரையாடல்களுக்கு அழைத்தபோது எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார திசாநாயக்கவும் அவரது கட்சியினரும் எந்தவொரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவில்லை.

அவர்கள் அக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலீடாக புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றே கூறினார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தினை பெற்றவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதோடு, அதற்கு பதிலீடாக புதிய சட்டத்தினைக் கொண்டுவருவதற்கும் முயற்சிக்கின்றார்கள். அதிகாரத்துக்கு வந்தவுடன் தமது கொள்கையிலிருந்து விலகிப் பயணிக்கின்றமையானது இதன்மூலமாக அம்பலமாகியுள்ளது. எவ்வாறாக இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பாகவே ஜே.வி.பியினர் இருக்கின்றார்கள். அப்போது அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தினார்கள். போராடினார்கள். எனினும் அவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அச்சட்டத்தினை பயன்படுத்தி வருகின்றார்கள்.

அதுமட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. எனினும் அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களையெல்லாம் கருத்தில் கொள்ளாது புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கு முனைகின்றார்கள்.

உண்மையில் அரசாங்கத்தின் செல்வாக்கு மலிந்து வருகின்ற நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள், கருத்துருவாக்கங்கள் எழக்கூடாது என்றே கருதும் நிலையொன்று காணப்படுகின்றது. ஆகவே தமக்கு எதிரான நிலைமைகளை கையாள்வதற்கே புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்குவதற்கு அரசாங்கம் முனைகின்றது.

இலங்கையின் குற்றவியல் தண்டனைக் கோவையில் காணப்படும் ஏற்பாடுகள் நிலைமைகளை கையாள்வதற்கு போதுமானவையாக காணப்படுகின்றன. அப்படியிருக்கையில் புதிய சட்டம் ஏற்பாடு செய்யப்படுவதானது சர்வதேசத்தை ஏமாற்றி நாட்டை இரும்புப் பிடிக்குள் வைத்திருப்பதற்கே ஆகும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply