இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்பெயின், ரஷ்யாவிலுள்ள மொராக்கோ எல்லை மற்றும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இன்று மூன்று தீர்மானங்களை முன்வைத்தது.
இதில் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகள் பதிவாகின. எதிராக 15 வாக்குகள் பதிவாகின. 40 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கையில் இடம்பெற்ற மிகக் சமீபத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் நாட்டில் காணப்படும் ஆபத்தான போக்குகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக தீர்மானம் குறிப்பிடுகிறது.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துகின்றனர். இந்தச் சட்டம் சந்தேக நபர்களை ஆதாரங்கள் இன்றி கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸூக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. இது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கான வழியாக உள்ளது எனவும் தீா்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது தடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதுடன், இரத்துச் செய்யவதற்கான உறுதி மொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையிலேயே இலங்கைக்கு ஜி.எஸ்.பி + சலுகை 2017 மே 19 முதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டதையும் தீா்மானம் நினைவுகூர்ந்துள்ளது.