இங்கிலாந்து அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கும் அரசு குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரசு குடும்பம் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை உணர்த்தும் வகையில் புது வருடத்தில் ஆச்சரியமான முடிவை இளவரசர் ஹாரி அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுகின்றனர் என்பதே அது.
இதுகுறித்து இளவரசர் ஹாரி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு முன்னேற்றத்திற்கான புதிய பாத்திரத்தை இப்புதிய வருடத்தில் துவக்க இருக்கிறோம். தற்போது இங்கிலாந்து, வட அமெரிக்காவில் எங்கள் நேரத்தை செலவிட இருக்கிறோம். பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்யவேண்டிய எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம். நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம். ஆனால் அரசுடன் நெருக்கம் காட்ட மாட்டோம். பல நாட்களாக இதை யோசித்து முடிவு எடுத்துள்ளோம். நிறைய விவாதித்து இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம். எங்கள் மனது ஆட்சி செய்வதில் விருப்பம் கொள்ளவில்லை என்றார்.
இளவரசர் ஹாரியின் இம்முடிவுக்கு இங்கிலாந்து மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஹாரி- மேகன் தம்பதியினர் வட அமெரிக்கா சென்று அங்கு வாழ முடிவு செய்துள்ளனர். லண்டனில் கொஞ்ச நாட்கள் மட்டும் தங்கி இருக்க போகிறார்கள்.
அவர்கள் சொந்தமாக வேலை செய்து சம்பாதிக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் ஆகும்.