தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வாக வடகிழக்கு தமிழர் தாயகம், தமிழ்த்தேசம், இறைமை , சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கக மாணவர்கள் சுகந்திர தின எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு அறிக்கையினை முன்வைத்தால் நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் 5ம் திகதி ஸ்ரீலங்கா தனது 75வது சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கான
ஏற்பாடுகளைச்செய்துகொண்டிருக்கிறது. இந்த நாள் தமிழர்களைப்பொறுத்தவரையில் ஒரு கரிநாளாகும். கிட்டத்தட்ட 518 வருடங்களுக்கு முன்னர் தமிழ்த்தேசத்தினுடைய இறைமை போர்த்துக்கேயர்களிடம் இழந்தது. படிப்படியாக ஒல்லாந்தருடைய ஆக்கிரமிப்பு பின்னர் ஆங்கிலேயருடைய ஆக்கிரமிப்பு நாங்கள் எங்கள் தேசத்தினுடைய இறையாண்மையை, சுயாட்சியை இழந்து அந்நியர்களிடம் எங்களுடைய தேசம் அடிமைப்பட்டுக்கிடந்தது. அந்த
அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்காக எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாகவே போராடியிருக்கின்றார்கள்.
அந்தவகையிலே, ஆங்கிலேயர்களிடம் 1796ம் ஆண்டு இழந்த அந்த இறைமை 1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களாலே சிங்களவர்களிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அது சிங்களவர்களுக்கான ஒரு சுகந்திரமாகவே அமைந்ததே தவிர
தமிழர்களுக்கானதாக அமையவில்லை. தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாகவே இந்த தீவிலே ஒரு காலனித்துவ ஆட்சியின் கீழே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எங்களுடைய தேசம், உரிமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் எப்பொழுது எங்களுக்கொரு ஆட்சி அதிகாரம் கிடைக்கின்றதோ அன்றுதான் அது தமிழர்களுக்குரிய சுகந்திரமாக அது இருக்கமுடியும்.
அந்தவகையில், வழமைபோன்று இம்முறையும் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுகந்திர தினமாக கொண்டாடுகின்ற அதே நேரம் தமிழர்கள் வடகிழக்கிலே அந்த நாளை ஒரு கரிநாளாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
கடந்த காலங்களிலே நாங்கள் கறுப்புக்கொடிகளைக்கட்டி இந்த நாளை ஒரு கரிநாளாகவே
அடையாளப்படுத்தியிருந்தோம். வெறுமனே ஒரு கரிநாளாக அடையாளப்படுத்துவது மாத்திரமன்றி எமக்கு எப்படிப்பட்ட உரிமை வேண்டும் என்பதனையும் கூடவே வலியுறுத்தி வந்தோம். வடகிழக்கு தமிழர் தாயகம், தமிழ்த்தேசம், இறைமை , சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதிலே எமது மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
2009 வரை எமது தேசியத்தலைவர் பிரபாகரனுடைய தலைமையிலே எங்களுடைய தேசத்தினுடைய அங்கீகாரத்திற்கான போராட்டம் நமைபெற்று வந்தது. 2009 ற்கு பிற்பாடு அந்த தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் சிங்களதேசத்தோடு சேர்ந்து இந்த அடிமைப்படுத்தப்பட்ட நாளை தங்களுடைய சுதந்திர நாளாக கொண்டாட
முற்பட்டிருந்தார்கள். குறிப்பாக வடக்கு – கிழக்கிலிருந்து பாராளுமன்றம் சென்ற
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இந்த சுகந்திர தினங்களிலே கலந்துகொண்டு, சிங்களக்கொடிகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு வெற்றி விழாவாகக் கொண்டாடினார்கள்.
இருப்பினும், தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் அவர்களும் இந்த சுதந்திரதினத்தை கரிநாளாக அடையாளப்படுத்துவதற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்களைப்பொறுத்த வரையில் இந்த நாளை கரிநாளாகவே அடையாளப்படுத்த வேண்டும். வடகிழக்கிலுள்ள வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடிகளைக்கட்டி கரிநாளாக அடையாளப்படுத்த வேண்டும். தமிழர்கள் சகல விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்து அதை ஒரு துக்க நாளாகக் அடையாளப்படுத்த வேண்டும். இதனடிப்படையில் நாங்கள் இந்த நாளில் போராட்டங்களை நடாத்துவது வழமை. அதுபோலவே இம்முறையும் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தவேளை, கடந்த 26ம் திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மணவர் ஒன்றிய தலைவர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பாக பேச வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.
அன்றையதினம் மாலை எங்களுடைய இந்த அலுவலகத்தில் மாணவர்களைச்சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக்
கேட்டறிந்தோம். அவர்கள் இந்த சுகந்திர நாளை கரிநாளாக அடையாளப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதனடிப்படையில் எதிர்ப்பு பேரணி ஒன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பிலே நிறைவு செய்ய இருப்பதாகவும் அந்த பேரணிக்கு எங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள் . நாங்கள்
அவர்களிடம், இவ்வாறான முயற்சிகளுக்கு எங்களுடைய பூரண ஆதரவு இருக்கும் அதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், ஆனால், அந்த பேரணிகளில் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும் எனவும். அது தொடர்பாக உங்களோடு எங்களுக்கு ஏற்படும் பட்சத்தில் போராட்டத்திற்கு எங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கமுடியும் என நாங்கள் கூறினோம்.
மேலும், பேரணியினுடைய நோக்கம் பற்றி கேட்டபொழுது சுதந்திரதினம் தமிழர்களுக்குரியது அல்ல. பொங்குதமிழ் பிரகடனத்திலே வலியுறுத்தியுள்ளது போன்று தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சமஸ்டி தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் இந்த பேரணியைச்செய்யப்போவதாக தெரிவித்தார்கள். அப்பொழுது நாங்கள் அவர்களிடம் தெளிவாக ஒரு விடயத்தைக்கூறினோம். தமிழ் மக்களால் 1949ம் ஆண்டிலிருந்து வலியுறுத்தப்பட்டு
வருகின்ற கோரிக்கைகள். இது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்றைய காலகட்டத்திலே நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக அல்லது புதியவொரு அரசியல் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசும் தமிழ்த்தரப்பும் பேசி வருகின்ற நிலைமையிலே தமிழ் மக்களுக்கு எத்தகையவொரு அரசியல் தீர்வென்பது தொடர்பாக
பல்வேறுபட்ட ஏமாற்று வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றவொரு சூழலிலே, நீங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் சில விடயங்களை ஆணித்தரமாக சமூகத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.
விடுதலைப்போராட்டம் 1987 இலிருந்து 2009 வரை உறுதியாக நிராகரித்து வந்த பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களுடைய தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவும் அல்ல; தீர்வும் அல்ல என்பதை நீங்கள் உங்களுடைய மகஜரில் தெளிவாக குறிப்பிட்டு அது முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். அதுமட்டுமல்லாமல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் யாப்புக்கான அரசியல் நிர்ணய சபையை அறிவித்திருந்தது. அந்த
சபையிலே பாராளுமன்றத்திலே தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளாகவிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் பங்கெடுத்து அரசாங்கத்தோடு இணைந்து புதிய அரசியல் யாப்பிற்கான ஒரு இடைக்கால வரைபொன்றை தயாரித்திருந்தார்கள்.
அந்த இடைக்கால வரைபில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பௌத்தம் முதன்மை மதம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதனையும் அதேநேரம் வடகிழக்கு இணைப்பு மற்றும் சமஸ்டியைக்கைவிடுவதாகவும் “ஏக்கிய ராஜ்ய” வை ற்றுக்கொள்வதாகவும் எழுத்துமூலமாக கொடுத்து இணக்கம் தெரிவித்திருந்தார்கள். ஆகவே “ஏக்கிய ராஜ்ய” அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற இடைக்கால வரைபு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள்
தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அத்தோடு தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நிகழ்ந்திருக்கின்ற இந்த சூழலிலே இனப்படுகொலைக்கான மனித உரிமைகள் விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த பொறுப்புக்கூறல் விவகாரம் என்பது ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றிற்கு பாரப்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த விடயங்களை நீங்கள் முன்கூட்டியே உங்களுடைய அறிக்கைகளில் வெளிப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் அது உறுதிப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் எங்களுடைய ஆதரவு இருக்கும் என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம்.
ஆனால், இந்த ஊடகசந்திப்பை நடாத்துகின்ற இந்த தருணம் வரை அவர்களிடமிருந்து
எந்தவிதமான பதில்களும் கிடைக்காத ஒரு நிலைமையிலே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டும் என்று வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமோ அதைவிட நூறு மடங்கு முக்கியமானது ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு முன்னெடுக்கப்படுன்கின்ற சதிகளை
அம்பலப்படுத்துகின்ற வகையிலான எந்தவித உத்தரவாதமும் இல்லாதவிடத்தில் நாங்கள் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்க முடியாமல் இருக்கின்றோம் என்னதனை இந்தவிடத்தில் தெரியப்படுத்த வேண்டியதற்கானவொரு கடப்பாட்டிற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஆனாலும், இன்னமும் நாட்கள் இருக்கின்றன. இதற்கிடையில் மாணவர்கள் பகிரங்கமாக இந்த நிலைப்பாடுகளை உள்ளடக்கி அதே நேரத்தில் தீர்வாக எங்களுடைய தேசம், உரிமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்து இந்த பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு
அறிக்கையினை முன்வைத்தால் நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம். இல்லையேல் எமது அரசியல் இயக்கம் வழமை போலவே சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து சுகந்திர தினத்திற்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதைனையும் நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள
விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.