யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று (17.02) காலை திறந்துவைக்கப்பட்டது.
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பாணு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உணவகத்தை திறந்து வைத்தார்.
சுமார் ஜந்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தால், வளாகத்தில் கல்வி பயிலும் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் அதனை அண்டிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயனடையவுள்ளனர்.

குறித்த அம்மாச்சி உணவகம் வவுனியா வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்தாலும் வீதிப்பயணிகள் மற்றும் அயல் கிராமத்தவர்கள் எவ்வேளையிலும் பயன்படுத்த முடியும் என வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அரச அதிபர் சமன் பந்துலசேன, வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளர் க. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.