முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூங்கிலாற்று பகுதியில் இயங்கிவரும் வசீகரன் முன்பள்ளி ஆசிரியர்களின் செயற்பாட்டால் பெற்றோர்கள்,மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, குறித்த பெற்றோர்களால் வலயக்கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்களே மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்களினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முன்பள்ளிக்கு அனுப்புவதில் அச்சம் வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் திணைக்கள அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
பெற்றோர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களாக, குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு விடயம் தொடர்பில் பெற்றோருடன் முரண்படுதல்.
முன்பள்ளிக்கு எதிர்வீதியில் இருக்கும் இரு பெண் சகோதரர்களே ஆசிரியராக கடமையாற்றுகின்றார்கள் இதனால் நேர முகாமைத்துவம் இன்மை.
விளையாட்டு போட்டிக்கு பணம் கட்டாத காரணத்தினால் பிள்ளையை நிகழ்வில் இருந்து விலக்கி வைத்தமை.
பாடசாலை நிர்வாக குழுவின் கணக்காளராக ஒருவர் ஏழு வருடமாக கடமையாற்றி வருகின்றார்.
பாடசாலையில் சரி பிழைகளை தட்டிக்கேட்பவர்களை ஆசிரியர்கள் தங்கள் கணவன்மார்களை வைத்து அச்சுறுத்துதல்.
விளையாட்டு போட்டியில் சிறுபிள்ளைக்கு வழங்கிய பரிசிலை திருப்ப பெற்றுக்கொண்டமை.
தொடர்ந்தும் 12 ஆண்டுகளாக எந்த இடமாற்றமும் இன்றி கடமை புரிந்து வருகின்றார்கள். வேறு ஆசிரியர்களை நியமிக்கவிடாது தொடர்ந்தும் தாமே ஆசிரியராக இருந்து வருகின்றமை என போன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கோட்டக்கல்வி அலுவலகம்,மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்,சிறுவர் நன்நடத்தை பிரிவு உள்ளிட்டவற்றுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்