யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழம் வாங்கச் சென்ற பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து, தகாத வார்த்தை பேசியதால், தட்டிக் கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட சிறீலங்கா காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி உந்துருளியில் வந்த இருவரினால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியால் சிறீலங்கா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினர், சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரை கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.