பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 21-ந் தேதி கைபர் பக்துங்வாவின் குர்ராம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் அதை மீறியும் தொடர்ந்து வன்முறை சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் நேற்று இரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.