காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் விவாதித்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
உலக பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருவரும் நேற்று சந்தித்து பேசினர்.
இருதரப்பு உறவு, வர்த்தகம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,
காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் விவாதித்தேன். நாங்கள் உதவ முடிந்தால், நிச்சயமாக உதவுவோம். இந்த பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். வாய்ப்பு கிடைத்தால் இருநாடுகள் இடையே சமரசம் செய்ய ஆவலாக உள்ளேன் என கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ள நிலையில், நான்காவது முறையாக டிரம்ப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.