பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை!

  • Post author:
You are currently viewing பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார்.

76 வயதான முஷரப் பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்தபோது ஆட்சியை பிடித்தார். 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் சர்வாதிகாரியானார். முஷரப் 2001-ம் ஆண்டு ஜூன் 20-ந்திகதி பாகிஸ்தானின் அதிபராக பொறுப்பு ஏற்றார்.

முஷரப் அதிபராக இருந்தபோது 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ந்திகதி அவசர நிலையை கொண்டு வந்தார். சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டார்.

இது அந்நாட்டில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முஷரப் மீது பதவி நீக்கம் கொண்டுவர முயன்றபோது அவர் 2008-ம் ஆண்டு பதவி விலகி தேர்தலை சந்தித்தார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

சர்தாரி தலைமையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது முஷரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டின் மேற்பார்வையில் பெஷாவரில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது.

முஷரப் மீதான தேச துரோக வழக்கு சிறப்பு கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் நவம்பர் 19-ந்திகதிக்கு தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேச துரோக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வாக்கர் அகமதுசேத், நீதிபதிகள் நாசர் அக்பர், ‌ஷகீத்கரீம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டபோது முஷரப் பாகிஸ்தானில் இல்லை. உடல்நலம் சரியில்லாத அவர் 2016-ம் ஆண்டு முதல் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரை பாகிஸ்தானுக்கு கொண்டு வர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் அப்பீல் செய்யலாம். அவர் துபாயில் இருப்பதால் அவரது சார்பில் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஷரப் ராணுவ தளபதியாக இருந்தபோதுதான் கார்கில் போர் நடைபெற்றது. இந்த போர் உருவாவதற்கு அவர்தான் முக்கிய காரணமாக இருந்தார். அந்நாட்டின் சர்வாதிகாரியாக திகழ்ந்து செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக அவர் விளங்கினார். தற்போது மரண தண்டனையில் சிக்கி உள்ளார்.

பகிர்ந்துகொள்ள