பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 99 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிந்திய செய்தி(20:45) :
பாகிஸ்தானில் ஏற்பட்ட பயணிகள் விமான விபத்தினால் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று “The Express Tribune” எழுதியுள்ளது.
இந்த விபத்தினை பாகிஸ்தான் சர்வதேச விமான செய்தித் தொடர்பாளர் அப்துல் சத்தார் உறுதிசெய்துள்ளார். மேலும் இந்த ஏ -320 என்ற விமானம் 99 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதில் பயணம் செய்த 99 பயணிகளின் நிலை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டுவீட்டில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்
கொரோனா வைரஸால் ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.