மே-18, முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழ் இனப் படுகொலையை நினைவுகூர்ந்து தமிழ் சமூகத்துக்கு ஆதரவைத் தெரிவிப்பதாக கனடாவின் மூன்றாவது பெரிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத்_சிங் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ ஒன்றையும் அவா் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
வணக்கம் என தமிழில் ஆரம்பித்த அவா், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் அது குறித்து எனது குரலையும் பதிவு செய்ய விரும்புகிறேன் எனத் தெரிவித்தாா். பெருமெடுப்பில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை நினைவில் கொள்வது முக்கியமானது. இது பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான நீதி, சமாதானப் பொறிமுறைக்கும் அவசியமானது எனவும் அவா் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் நான் இலங்கை அரசாங்கத்தின் அநீதிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துடன் நிற்கிறேன். அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன். அத்துடன், ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வார சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்பட்டவர்களை பாராட்டுகிறேன். இனப்படுகொலை நினைவேந்தல் வரலாற்றில் இதுவொரு முக்கியமான படியாகும். தமிழ் சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலை, வன்முறைகள் தொடர்பில் எதிர்கால சந்ததிக்கு அறிவூட்டுவதில் இதுவொரும் முக்கிய செயற்றிட்டமாகும் எனவும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத்_சிங் தெரிவித்துள்ளார்.