பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இணைந்து நீதிக்காகப் போராடுவது இனவாதமா?

You are currently viewing பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இணைந்து நீதிக்காகப் போராடுவது இனவாதமா?

தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதை இனவாதம் என ஜனாதிபதி  கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவானதாகும். இருப்பினும் இந்தப் பிரச்சினையை மையப்படுத்தியதாக நிலவும் வடக்கு மற்றும் தெற்கு அரசியல் அகலவேண்டும்.

அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வுகாண இடமளிப்பதில்லை. அவர்களுக்கு இனவாதம் தேவை. எங்கேனும் தொல்பொருள் சின்னங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் நோக்கவேண்டுமே தவிர, அது இந்துக்களுக்கு உரியதா அல்லது பௌத்தர்களுக்கு உரியதா என இன, மத அடிப்படையில் நோக்கக்கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தமிழர் விரோத இனவாத அரசாங்கங்களைப் போன்றதா? அல்லது உண்மையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்புள்ளியா? என்ற விடயம் இதனூடாக வெளிப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

‘யாழ் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தொல்பொருள் சார்ந்த எந்தவொரு சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக அது தனியார் காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக அவ்விகாரையை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், இந்த சட்டவிரோத விகாரை நிர்மாணம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் குறித்த விகாரை நிர்மாணம் சட்டவிரோதமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்த விகாரையை நிர்மாணிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததன் பின்னர் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் சகல கருத்துக்களும் அப்பட்டமான பொய்கள் மாத்திரமே’ எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மேலும் உண்மைப் பின்னணி இவ்வாறிருக்கையில் தாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதையும் இனவாதம் என ஜனாதிபதி  கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் கூறியது. அவ்வாறிருக்கையில் இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்மானமொன்றை எடுக்காமல், ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருப்பது ஏன்? தேசிய மக்கள் சக்தி முழுவதுமாக மக்கள் விடுதலை முன்னணியின் கைகளுக்குள்ளேயே இருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி என்பது நீண்டகாலமாக தமிழர் விரோத கொள்கையுடன் இனவாத அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைப்பாகும். எனவே தேசிய மக்கள் சக்தியின் போலி முகம் இந்த தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் அம்பலமாகியிருக்கிறது’ எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply