கொரோனா பாதிப்பின் தீவிரம் தெரிந்தும், உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.
கடந்த 3 மாதங்களாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா 6 கண்டங்கள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன் கோர முகத்தை காட்டி உள்ளது.
கொரோனாவால் சர்வதேச வணிகம், சுற்றுலா, விளையாட்டு நிகழ்வுகள், கல்வி என பல விஷயங்களை முடங்கி உள்ளது . ஆனால் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகள் முறையாக தயாராகவில்லை என்று உலக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சில நாடுகள் சுணக்கம் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது, ஒத்திகை அல்ல. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் உலகம் முழுவதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பருவகால காய்ச்சலின் இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான இறப்பு விகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரம் தெரிந்தும், உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை.
இந்த கொரோனா தொற்று ஒவ்வொரு நாட்டிற்கும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் என பாகுபாடின்றி அச்சுறுத்தலாக உள்ளது என்பதை உணர வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசு தலைவர்களும் கொரோனவை கட்டுப்படுத்தும் பொறுப்பை சுகாதார அமைச்சகங்களிடம் மட்டும் விடாமல், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் என கூறினார்.
அதே போல கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. ஒரு சிலருக்கு லேசான அறிகுறி கூட இல்லாமல் கொரோனா உடலில் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா விவகாரத்தில் அனைத்து நாடுகளும் செய்யவேண்டிய ஒரே செயல் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, துரிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தயாராக இருப்பதே என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.