இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகாப்புத்தரப்பினரும் அரசாங்கமும் போராட்டக்காரர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையின் ஊடாகப் பாதுகாப்புத்தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
ஏனெனில் சர்வதேச சட்டமானது அவசரகாலநிலை அமுலில் உள்ளபோது சில உரிமைகளுக்கு விலக்களிப்பதால் சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறல், மிகையான அளவில் படையினரைப் பயன்படுத்தல் மற்றும் ஏனைய சில உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
ஆகவே அவசரகால வழிகாட்டல்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப்போராட்டங்களை முடக்குவதற்கோ அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிகையான பாதுகாப்புப்படையினரை பணியில் ஈடுபடுத்துவதற்கோ பயன்படுத்தப்படக்கூடாது.
கடந்த காலங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால வழிகாட்டல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்கு மிகையான அளவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது.
எனவே சிவில் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கு அமைவாகவே இராணுவத்தினர் செயற்படவேண்டும் என்பதுடன், ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் அடிப்படை மனித உரிமைகளுக்கு அமைவாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.