பாப்பரசர் பிரான்சிஸின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த புடின்!

You are currently viewing பாப்பரசர் பிரான்சிஸின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த புடின்!

உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்திப்பை கோரியதாகவும் ஆனால் அதை அவர் மறுத்துள்ளதாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். இத்தாலியின் நாளேடு ஒன்றிற்கு இந்த விவகாரம் தொடர்பில் பதிலளித்த 85 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்று வாரங்களில் வத்திக்கான் தூதர்கள் மூலம் ரஷ்யாவை தொடர்பு கொண்டு ஜனாதிபதி புடினுடன் சந்திப்புக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு போப் பிரான்சிஸ் ஹங்கேரி பிரதமரும் தீவிர வலதுசாரி தலைவருமான விக்டர் ஓர்பனை சந்தித்தார். அந்த சந்திப்பில் இருவரும் ரஷ்ய உக்ரைன் தொடர்பில் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதில், ரஷ்யாவுக்கு என சில திட்டங்கள் இருப்பதாகவும், மே 9ம் திகதி அனைத்து விவகாரங்களுக்கான பதில் கிடைக்கும் எனவும், போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் ஓர்பன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே பாப்பரசர் பிரான்சிஸ் ரஷ்ய ஜனாதிபதியை மீண்டும் தொடர்பு கொண்டு, சந்திப்புக்கு வாய்ப்பு கோரியுள்ளார். ஆனால், புடின் கண்டிப்பாக இந்த சந்திப்புக்கு தயாராக மாட்டார் என தாம் அஞ்சுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பயணப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பாப்பரசர் பிரான்சிஸ், இப்போதைக்கு இல்லை எனவும், முதலில் ரஷ்யாவுக்கு தான் செல்ல வேண்டும் எனவும், புடினை சந்தித்து தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply