பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல் துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
நான்டெரி பகுதியில் கடந்தசெவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் அமைதிக்காக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தும் பல இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை காலையில் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தெற்கே டல்லவுஸ் முதல் வடக்கே லில்லி வரையிலான பல நகரங்களில் ஏராளமான வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக போலீஸார் பலரை கைதுசெய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இளைஞரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை போலீஸார் காவலில் வைத்துள்ளனர். இன பாகுபாடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கொலையான இளைஞரின் குடும்பம் குறித்த முழுமையான தகவல்களை காவல் துறை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.