பாரிஸ் பிராந்தியத்தில் நேற்று மாலை விரும்பத்தகாத ஒரு வாசனையைத் தாங்கள் முகர்ந்தனர் என்று பலரும் சமூகவலைத் தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக தீயணைப்புப் பிரிவினரிடம் தொடர்பு கொண்டு பலரும் வினவியுள்ளனர்.
இல் து பிரான்ஸின்(Ile-de-France) பல பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த கந்தக (Sulfur) வாசனை தற்போதைய மோசமான வானிலையுடன் தொடர்புபட்டதாக இருக்கவேண்டும் என்று தீயணைப்புப் பிரிவினர் விளக்கம் அளித்துள்ளனர்
எந்தப் பகுதியிலாவது தீ விபத்தோ அல்லது தொழிற்சாலை அசம்பாவிதங்களோ இடம்பெறவில்லை என்பதை தீயணைப்புப் படையினர் உறுதி செய்து அதுபற்றிய தகவலை உடனடியாகவே வெளியிட்டிருக்கின்றனர்.
இது இடி மின்னல் வானிலையுடன் தொடர்பு பட்ட ஒன்றுதான் என்பதை பாரிஸ் நகரசபை அதிகாரி ஒருவரும் பின்னர் உறுதிப்படுத்தி னார்.
ஞாயிறு இரவு உணரப்பட்ட இத் துர்நாற்றத்தின் மூலம் என்ன என்பதை அறிய ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என பாரிஸ் நகர மேயர் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் பொலிஸ் தலைமையகம் இந்தப் பரிசோதனையை நடத்துகிறது.
பாரிஸ் உட்பட நாடு முழுவதும் மழை வெள்ளம், இடி மின்னல்,கடும் காற்று என மோசமான காலநிலை நீடிப்பதால் ஒரு வித மந்த நிலை காணப்படுகிறது.
ஞாயிறு மாலை முதல் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக பாரிஸ் பிராந்தியத்திற்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மக்கள் சுமார் இரண்டு மாதகால உள்ளிருப்புக்குப் பின்னர் இன்று காலை முதல் வீடுகளை விட்டு கட்டுப்பாடுகள் இன்றி வெளியே வந்து நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 17 ஆம் திகதி இரவு நடைமுறைக்கு வந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் இன்று முதலாவது கட்டமாக தளர்த்தப்பட்டி ருக்கின்றன.
கட்டுப்பாடுகள் தளர்ந்தபோதும் மோசமான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
11-05-2020 (குமாரதாஸன்)