ஊரெழு தந்த உத்தம வீரனே/
உருகும் மெழுகாய் உயிர் உருக்கி/
பருக நீரும் விடுத்து நோன்பிருந்து/
பாருக்கே தியாகம் சொன்னாய் பார்த்தீபனே/
ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சையும் தெரியுமென/
ஆதிக்க அரசுகளுக்கு அறைகூவல் செய்தே/
போதித்தாய் சத்தியப் பாதையின் தத்துவம்/
சாதித்தாய் மக்கள் மனங்களில் நின்று/
நல்லூரின் வீதியிலே நடத்தினாய் யாகம்/
எல்லோரும் துடித்து வடித்தனர் கண்ணீர்/
கொல்லாமை பேசிய பாரதம் பார்த்திருந்தது/
கொள்கையில் அசையவில்லை உன் உறுதி/
ஐந்து. கோரிக்கை அரசின் முன்வைத்து/
அகிம்சைப் போரில் புரட்சித்தீ வளர்த்தாய்/
கண்ணிருந்தும் குருடரானது காந்தி தேசம்/
மண்ணுக்காய் மக்களுக்காய் மரணிக்கத் துணிந்தாய்/
பேசமுடியா நிலையிலும் உருகியே பேசினாய் /
பாசத்துக்குரிய மக்களே மக்கள்புரட்சி வெடிக்கட்டும்/
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் /
நேசமான தோழர்களோடு வானிலிருந்து பார்ப்பேனென/
பன்னீரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து/
தியாகதீபம் திலீபன் சத்தியவேள்வியில்
சரித்திரமானான்/
தமிழீழக் கனவுகள் கனவாகவே இன்றுவரை/
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் காத்திருக்கிறான்//
கீத்தா பரமானந்தன்18-09-20202-ஜேர்மனி