வீரத்தின் மகன் கதை சார்ந்து எமக்கு தரப்பட்ட உறுதிப்பாட்டினை நம்பி எமது தளங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தோம் ஆனால் அது முற்றிலும் தவறு என்று அறிந்ததும் எமது இணையத்தில் வெளியிட்டிருந்த செய்திகளை அகற்றியிருந்தோம்.
ஆனாலும் தமிழ்த்தேசிய ஊடகம் என்பதன் அடிப்படையில் தமித்தேசிய விடுதலைப்பேராட்டத்தினை கொச்சைப்படுத்துகின்ற, அவமதிக்கின்ற, வரலாறுகளை திரிவுபடுத்துகின்ற இப்படியான திரைப்படங்களுக்கு எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்பதன் அடிப்படையில் வீரத்தின் மகன் திரைப்படம் சார்ந்த எமது கருத்தினை இங்கே பதிவுசெய்கின்றோம்.
வரலாறு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்ற தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகள் சுத்தமான பாலாக கொடுக்கப்படவேண்டும்.
பாலில் மெல்லக்கொல்லும் விசம் கலந்து கொடுப்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது அப்படித்தான் வீரத்தின் மகன் திரைப்படமும் வெளிவந்திருக்கின்றது.
8 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இத் திரைப்படமானது இப்போது தூசி துடைக்கப்பட்டு இளைவர்களின் சிந்தனையை மடைமாற்றுவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் தமிழ்மக்களுக்கு சிறீலங்கா படைகளால் இழைக்கப்படும் சித்திரைவதைகள் உணர்வுகளை தொடும் காட்சிகளாக மக்கள் மனங்களை வெல்வதற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் கதையின் மூலக்கருத்து சிறீலங்கா இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் தந்திரோபாயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழத்தேசியத்தலைவரின் மகன் சிறீலங்கா இராணுத்தின் அரவணைப்பில் திளைப்பதாக உருவாக்கப்பட்டிருப்பதானது மண்டியிடாத வீரத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
ஒரு உண்மையான வரலாற்றை கற்பனை என்ற மடைமாற்று சிந்தனைக்கூடாக சிதைத்து சின்னாபின்னப்படுத்தியதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எதிரிகளாலும் உதிரிகளாலும் விடுதலைப்புலிகளின் உறுதியான சிந்தனைகளை சிதைக்கவேண்டும் என்பதற்காக பல விடயங்கள் புலிநீக்க அரசியலை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது, காரணம் தமிழ் மக்களுக்காக உண்மையான உறுதியான விட்டுக்கொடுக்காத அரசியலை முன்னெடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஆகவே அந்த உறுதியான கோட்பாட்டை மடைமாற்றிவிட்டால் தமிழர்கள் மீண்டும் நாணல் புற்களாக மாறிவிடுவார்கள் என எதிரிகள் நம்புகிறார்கள் அதனால் மக்களின் பொழுதுபோக்கான கலைவடிவங்களுக்கூடாகவும் புலிநீக்க அரசியலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
எனவே இன்னும் பல திரைப்படங்கள் வரிசைகட்டி வரப்போகின்றன தமிழரின் வரலாற்றை திரிவுபடுத்தி இளையோரின் சிந்தனைகளை திசை திருப்பப்போகின்றன, இவற்றை புறந்தள்ள ஒத்திசைவாய் எமது சரியான வரலாற்றை மட்டும் அடுத்த சந்ததிகளுக்கு கடத்தி எமது கருத்தியலை பாதுகாப்போம்.
-தமிழ் முரசம் வானொலி-