இனத்தை அழித்தவனுக்கு ஒற்றை விரலை நீட்டென பிணத்தை தின்றவன் பின்னே பினாத்துகின்றான்
சில தமிழன்!
கால் இல்லாத காலத்தை சினந்தவாறு இதயம் அழுக்குகளை உமிழ்ந்து கனத்து வெம்பி வெடிக்கிறது!
என் அம்மாவையும் அப்பாவையும் அண்ணனையும் தங்கையையும் தம்பியையும் அறுத்து போட்ட அரக்கர்கள் பின்னே
சுயநலக் கூட்டங்களின் ஊளை வானத்தைப் பிளக்கிறது!
கொத்துக்கொத்தாக எங்கள் இனத்தை கொன்றொழித்த கொடியவர் அரசுக்கு இன்னொரு தமிழன் ஜனாதிபதி வேட்பாளனாம்!
கொத்தடிமைகளாய் போன ஈனராய் சில ஈழத் தமிழன்!
ஒற்றை ஆட்சியே எங்கள் உரிமையை பறித்து ஒட்டுமொத்த இனத்தையும் அழித்தது என்பதை மறந்து ஆளுக்கொரு திசையில் நின்று ஓட்டு கேட்டு ஒப்பாரி வைக்கிறது ஒரு கூட்டம்!
அடப்பாவி மனிதரே!
இதற்குத்தானா?
இத்தனை தியாகங்கள்!
எத்தனை இடர்கள் வந்தாலும் இடறி வீழாது எத்தனை தடைகள் வந்தாலும் தளர்ந்து போகாது கொண்ட கொள்கையில் நின்ற எங்கள் மாமனிதர்கள் கண்களை விட்டு விலகி ஆண்டுகள் 15 தான் முடிந்தது!
அதற்குள் கொண்ட கொள்கையை மறந்து அண்டிப் பிழைக்கும் அடிமை பிழைப்பை அரவணைத்து அண்டைய நாட்டின் நிகழ்ச்சி நிரலில் தன் இனத்தையே விற்றுப் பிழைக்கிறது சில மந்திகள் கூட்டம்!
எல்லாம் இழந்து மிஞ்சி கிடப்பது கொண்ட கொள்கையின் அரசியல் மட்டும் தான் அதையும் நக்கிப் பிழைக்கும் நயவஞ்சகத்தில் துண்டாடப்படும் துயரம்!
ஆடைகளைக் களைந்து அம்மணமாய் நடைபயிலும் கோலமதாய் கொண்ட காலமாக இக்காலம்!
