சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாடகர் மாணிக்க விநாயகத்திற்கு (73) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக அவர் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். அதேபோல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க விநாயகம் சினிமா மட்டுமல்லாது பக்தி பாடல்கள் பாடியுள்ளதோடு பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். மாணிக்க விநாயகத்தின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்முரசத்தின் அழைப்பில் நோர்வே வந்த மாணிக்க விநாயகம் அவர்கள் தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியினை சிறப்பித்தவரும் பல தாயகப்பாடல்களை பாடியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் துயரில் நாமும் பங்கெடுப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.