பிரதமர் மோடி ஆலோசனை ; இந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்!

  • Post author:
You are currently viewing பிரதமர் மோடி ஆலோசனை ; இந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்!

இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சீனா ராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக இந்திய சீனா எல்லைப் பகுதிகளான பன்காங் டிஸோ ஏரி, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் டவுலட் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் இந்திய, சீனா படையினருக்கிடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்திய, சீனா படைகளுக்கிடையே மே 5-ம் தேதி நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததிலிருந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவிய சீன ராணுவம், இந்தியப் பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் கட்டுமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி கொடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் தற்போதுள்ள நிலையைத் தொடர வேண்டும் என்று இந்தியா சார்பில் சீனாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சீனா மறுத்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், லடாக் எல்லைப் பகுதியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கூர்ந்து கவனித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் எல்லையிலுள்ள சூழல் குறித்து அதிகாரிகள் விளக்கியிருந்தனர். இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள