பிரான்சில் உள்ள நீஸ் (Nice) நகரின் நீண்ட கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. இங்குள்ள Promenade des Anglais என்றழைக்கப்படும் கடற்கரையில் கால் பதிக்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு.
பிரான்ஸில் வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து கடற்கரைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டு ‘ட்ரோன்’ களின் மூலம் பொலிஸார் தீவிரமாக அதனைக் கண்காணித்து வருகின்றனர்.
பொதுவாக உல்லாசப் பயணிகள் நிறைந்து காணப்படும் நீஸ் கடற்கரை கடந்த சில வாரங்களாக அமைதியில் ஆழ்ந்து கிடக்கின்றது. கரையில் கடற்பறவை ஒன்று கூடுகட்டி இரண்டு முட்டைகளை இடும் அளவுக்கு அங்கு பூரண அமைதி.
மனித நடமாட்டம் மிகுந்த கடற்கரை ஒன்றில் மிக அரிதாக நிகழக்கூடிய இயற்கையின் இந்த அதிசயத்தை ஏ.எப்.பி. ஊடகப் படப்பிடிப்பாளர் ஒருவர் படமாக்கியுள்ளார்.
வழமையாக இருக்கைகள் போட்டு மனிதர்கள் அமர்ந்திருக்கும் கடற்கரைப்பகுதியில் கூளாங்கற்களின் மேல் கூடுகட்டி முட்டையிட்ட கடற்பறவை, மெல்ல இசை பாடுவதை தன்னால் கேட்க முடிந்தது என்று படப்பிடிப்பாளர் Valéry Hache ’20 நிமிடங்கள்’ (20 Minutes) ஊடகத்துக்கு தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் யோர்க் தொடருந்து நிலையத்திலும் (York Station)அண்மையில் இதுபோன்ற ஓர் அரிய நிகழ்வு இடம்பெற்றதை யோர்க் போக்குவரத்துப் பொலிஸார் தங்கள் ருவீற்றர் இல் வெளியிட்டிருந்தனர்.
பயணிகள் இன்றி அமைதியாக காணப்பட்ட தொடருந்து நிலையத்தில் பூந் தொட்டியில் வாத்து ஒன்று முட்டை இட்டிருந்த காட்சி அது.
(குமாரதாஸன்)