பிரான்சில் ஆசிரியரின் தலை வெட்டப்பட்ட பின்னணி என்ன?

You are currently viewing பிரான்சில் ஆசிரியரின் தலை வெட்டப்பட்ட பின்னணி என்ன?

பாரிஸ் நகர மையத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது கோபிளான் -சென் – ஹொனறின் (Conflans-Sainte-Honorine) கல்லூரி.

47 வயதான சாமுவல் பட்டி (Samuel Paty) அந்தக் கல்லூரியில் புவியியல் – வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்.

பிரான்சில் ஆசிரியரின் தலை வெட்டப்பட்ட பின்னணி என்ன? 1மாணவரிடையே மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்றவர் என்று அவரது சக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அர்ப்பணிப்புடன் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஆசிரியர் அவர் என்று அவரிடம் கற்ற பழைய மாணவர்கள் சொல்லிக் கொள்கின்றனர்.

கடந்த ஒக்ரோபர் 5ஆம்திகதி கருத்துச் சுதந்திரம் தொடர்பாகத் தனது பதின்ம வயது மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். அன்றைய அந்த வகுப்பறைப் பாடமே பதினைந்து நாள்கள் கழித்து அவரது படுகொலையில் முடிவடைந்திருக்கிறது.

அவரது தலைவிதியை மாற்றிய அன்றைய வகுப்பறைப்பாடத்தில் அப்படி என்னதான் போதனை நடந்தது?

இந்தக் கேள்விக்கான விடை தற்போது தெளிவாகக் கிடைத்து விட்டது. கருத்துச் சுதந்திரம் பற்றிய விளக்கங்களோடு அன்றைய பாடத்தை ஆரம்பித்த அந்த ஆசிரியர், உதாரணத்துக்கு “சார்ளி ஹெப்டோ” பத்திரிகை குறித்தும் அதன் கேலிச் சித்திரங்கள் பற்றியும் விளக்கமளித்துள்ளார். முகமது நபி சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களையும் மாணவர்களுக்குக் காண்பித்துள்ளார்.

பிரான்ஸின் பிரபல கேலிச் சித்திர வார இதழான “சார்ளி ஹெப்டோ” அடிக்கடி முகமது நபி சம்பந்தப்பட்ட கேலிச் சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.அதற்குப் பெரும் விலையாக அதன் ஆசிரிய பீடத்தினரது உயிர்களை ஒட்டுமொத்தமாகப் பலிகொடுக்க நேர்ந்த பிறகும் கூட அது இன்றுவரை தனது பதிப்புகளை நிறுத்தியதில்லை.

‘கருத்துச் சுதந்திரத்தின் உச்சம்’ என்று ஒரு பக்கமும் ‘மதம் மற்றும் தெய்வ நிந்தனை’ என்று இன்னொரு பக்கமுமாக இருவேறு விதமான விமர்சனங்கள் உள்ள போதிலும் “சார்ளி ஹெப்டோ” அதன் கேலிச் சித்திரங்களை தொடர்ந்து பிரசுரித்து வருகிறது.

முகம்மது நபியை கேலி செய்யும் சித்திரங்கள் தொடர்பாக நடக்கும் வன்முறைகளில் ஆகப் பிந்தி நிகழ்ந்திருக்கும் உயிர்ப்பலிதான் இந்த ஆசிரியர் படுகொலை.

சாமுவல் பட்டி தனது வகுப்பறையில் மாணவர்களுக்குக் கேலிச் சித்திரங்களைக் காட்டுவதற்கு முன்பாக, இஸ்லாமிய மாணவர்களை அது பாதிக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். இஸ்லாமிய மாணவர்கள் விரும்பினால் சற்று நேரம் வகுப்பறைக்கு வெளியே சென்று தங்கி இருக்கலாம் எனக் கூறி அதற்கான அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார் என்ற பல தகவல்களை ஊடகங்கள் இப்போது வெளியிடுகின்றன.

மாணவருக்கு கேலிச் சித்திரங்களைக் காட்டிய சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பின்னர் அத் தகவல் பெற்றோர்களுக்குத் தெரியவரவே அது அவர்களிடையே ஆசிரியர் மீதான எதிர்ப்புணர்வாக மாறியிருக்கிறது.

ஆசிரியரின் நடத்தை குறித்துப் பெற்றோர்கள் சங்கத்துக்கு முறைப்பாடுகளும் எட்டியிருக்கின்றன.

பிரான்சில் ஆசிரியரின் தலை வெட்டப்பட்ட பின்னணி என்ன? 2ஆசிரியரைக் கண்டிக்கும் காணொலிப் பதிவு ஒன்றை மாணவி ஒருவரின் தந்தை சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டார். அது கல்லூரி சமூகத்தவரிடையே சலசலப்பை உண்டுபண்ணியது. ஆசிரியரைப் பதவி நீக்கம் செய்யுமாறும் கல்லூரி நிர்வாகத்துக்கு பெற்றோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தன. தனக்கு எதிரான தேவையற்ற புகார்கள் அவை எனக் கூறி அது தொடர்பில் அந்த ஆசிரியரும் பொலீஸ் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய தந்தை ஒருவர் வெளியிட்ட சமூகவலைத்தளக் காணொலியில் “முகமது நபியை நிர்வாணமாகச் சித்திரிக்கும் படங்களை தனது மகளின் முன்பாகக் காட்டினார்” என்று தெரிவித்து ஆசிரியரைக் குற்றஞ்சாட்டியிருந்தார். “ரவுடி” என்ற அர்த்தத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் . அவரது வீடியோப் பதிவு பின்னர் சிலரால் பகிரப்பட்டும் உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே வெள்ளிக்கிழமை மாலை பொது வெளியில் வைத்து அந்த ஆசிரியர் தலை வெட்டிப் படுகொலை செய்யப் ப்பட்டிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு மொஸ்கோவில் (ரஷ்யா) பிறந்து ஓரிரு வயதில் பெற்றோருடன் பிரான்ஸில் குடியேறிய செச்சினிய இளைஞர் ஒருவரே ஆசிரியரைத் தண்டிக்கும் வகையில் வீதியில் வைத்து அவரைப் படுகொலை செய்திருக்கிறார்.

அப்துலாஹா அன்சொரோவ் (Abdoulakah Anzorov) என அறியப்படும் அந்த இளைஞன் ஓர் அகதியாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பத்து வருட வதிவிட அட்டை கடந்த மார்ச் 4ஆம் திகதி வழங்கப்பட்டிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனாக இருந்தபோது புரிந்த சிறு குற்றச் செயல்களுக்காக ஏற்கனவே அறியப்பட்டிருந்த அந்த இளைஞரின் பெயர், “எஸ்” கோவை (S File) என்கின்ற புலனாய்வாளர்களது கண்காணிப்புக்கு உட்பட்ட ஆபத்தான தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது

அப்துலாஹாவிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலேபேசியில் கொல்லப்பட்ட ஆசிரியரது படமும் தாக்குதலுக்கு உரிமை கோரும் ஆவணம் ஒன்றும் காணப்பட்டன என்று பயங்கரவாதச் செயல்களுக்கான அரச வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

பெரிய சமையல் கத்தி ஒன்றையும் கைத்துப்பாக்கியையும் வைத்திருந்த அப்துலாஹா ஆசிரியரின் வரவை எதிர்பார்த்து சிலமணி நேரங்களுக்கு முன்னரே கல்லூரி வாசலில் வந்து காத்து நின்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரைக் பழிவாங்கும் முடிவை கொலையாளி தன்னிச்சையாக எடுத்தாரா அல்லது அவருக்குப்பின்னால் தீவிரவாத இயக்கங்களின் தொடர்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இரவிரவாக நடத்தப்பட்ட தேடுதல்களில் தாக்குதலாளியின் பெற்றோர், சகோதரன், பேரன் உட்பட பத்துப் பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஆசிரியருக்கு எதிராகக் காணொலி வெளியிட்ட தந்தையும் அடங்கி உள்ளார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொலியை வெளியிட்ட பெற்றோரும் அதனைப் பகிர்ந்தவர்களும் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்ற கருத்து வலுத்துவருகிறது.இதனால் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளனர்.

“ஆசிரியரின் அடையாளங்களையும் அவரைப்பற்றிய தகவல்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பெற்றோர்களுக்கு இந்தப் பகிரங்கக் கொலையில் பங்கு உள்ளது. காணொலி போன்ற எந்த ஒன்றையும் நாங்கள் சாதாரணமாக நினைத்துக் கண்டும் காணாமல் கடந்து சென்றுவிடக்கூடாது என்ற செய்தியை அவர்களது கைது உணர்த்தியுள்ளது”

இவ்வாறு சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தனது மாணவர்களில் ஒரு பகுதியினரை பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டே ஆசிரியர் சர்சைக்குரிய கேலிச் சித்திரங்களை காட்டி போதனை செய்திருக்கிறார் என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் பிரான்ஸைப் பொறுத்தவரை கருத்துச் சுதந்திரம் பற்றிய விரிவுரைகளில், விவாதங்களில் “சார்ளி ஹெப்டோ” கேலிச் சித்திரங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகம் இத்தாக்குதலால் அதிர்ந்துபோய் இருக்கிறது. வைரஸோடு போராடிக் கொண்டிருந்த வகுப்பறைகளில் வன்முறை அச்சம் எழுகிறது. கருத்துச் சுதந்திரத்தை போதிக்கும்போது இனிமேல் தாங்கள் “சுயதணிக்கை” ஒன்றைப் பின்பற்ற வேண்டிய அச்ச நிலை தோன்றி இருப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும் மத நிந்தனை எதிர்ப்பும் மோதிக்கொள்ளும் ஒரு களத்தில் அரசிடமிருந்து பாதுகாப்புக் கோர வேண்டிய நிலைமை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மதசார்பின்மையை தீவிரமாகப் பேணும் ஒரு நாட்டில் பல் வேறு மதப் பின்னணி கொண்ட மாணவர்களை உள்ளடக்கிய வகுப்பறைகளில் ஆசிரியர்களது பொறுப்புணர்வு என்ன என்பதன் மீதும் இந்தச் சம்பவம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

நாடு முழுவதும் ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இப் படுகொலையை பிரெஞ்சு அரசு ஒரு “மிகத் தெளிவான இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்” என்று பிரகடனப்படுத்தி உள்ளது

கருத்துச் சுதந்திரத்தை போதிக்க முயன்ற ஆசிரியர் அதற்காகத் தனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்திருக்கிறது என்று பிரெஞ்சு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல் செய்திகளில் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அஞ்சலி நிகழ்வுகளும் அனுதாபப் பேரணிகளும் நடைபெற்றுவருகின்றன.

ஆசிரிய தொழிற்சங்கங்களது அழைப்பின் பேரில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகரின் புகழ் பெற்ற றிப்பப்பிளிக் சதுக்கத்தில் (Place de la Républiqu) நடைபெறுகிறது.

கொல்லப்பட்ட ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் புதன்கிழமை ஒருநாள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பதற்கு பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பகிர்ந்துகொள்ள