பிரான்சில் இனவெறி மற்றும் வெறுப்புக்கு ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாமியர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே மேக்ரான் இதை தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மேக்ரான், பிரான்சில் இனவெறி மற்றும் மத அடிப்படையிலான வெறுப்புக்கு இடமில்லை. வழிபாட்டு சுதந்திரத்தை மீற முடியாது என்றும் வெள்ளிக்கிழமை கொலை குறித்த தனது முதல் கருத்துக்களை மேக்ரான் பதிவு செய்துள்ளார்.
மேலும், இஸ்லாமிய மக்களுக்கு தமது ஆதரவு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்ட் பிராந்தியத்தில் உள்ள லா கிராண்ட்-கோம்பே கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில்,
தலைமறைவாக இருக்கும் தாக்குதல்தாரி, வழிபாட்டாளரை டசின் கணக்கான முறை கத்தியால் தாக்கி, பின்னர் தனது அலைபேசியில் நடந்த சம்பவத்தை படம்பிடித்து, இஸ்லாம் மதத்தையும் அவமதித்துள்ளார்.
பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ ஏற்கனவே இச்சம்பவத்தை இஸ்லாமிய வெறுப்பு அட்டூழியம் என குறிப்பிட்டு கண்டித்திருந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், சந்தேகத்திற்குரிய குற்றவாளி போஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்,
அவர் இஸ்லாமியர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட மாலி நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞனும், தாக்குதல் நடத்தியவரும் மசூதிக்குள் தனியாக இருந்துள்ளனர்.
முதலில் அந்த நபருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்த பிறகு, தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்டவரை 50 முறை வரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மற்ற வழிபாட்டாளர்கள் மசூதிக்கு வந்தபோதுதான், காலை வேளையில் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர் பிரான்சில் கடந்த 2004ல் பிறந்தவர் என்றும், ஆலிவர் என அவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
வேலையில்லாத, எந்த குற்றப் பதிவும் இல்லாத நபர் என்றே கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்தியவர் மிகவும் ஆபத்தானவர் என்றும், மேலும் பலர் மீது அவர் தாக்குதல் தொடரும் முன்னர் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.