வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 14 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 9 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் இன்று 15.08.2020 சனிக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை லாக்கூர்னோவ் மாநகரசபையின் முன்னாள் ஆலோசகரும் தமிழீழ தேசத்திலும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட உணர்வாளருமான திரு. அந்தோனி ரூ செல் அவர்கள் ஏற்றிவைத்தார். வள்ளிபுனத்தில் படுகொலைசெய்யப்பட்ட 61 மாணவிகளதும் தோழர் செங்கொடியினதும் நிழல் படங்களுக்கான ஈகைச்சுடரினை 03.07.1988 அன்று இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.மரியபுலேந்திரன் அவர்களின் சகோதரன் அவர்களும் 01.04.2001 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். ஆதவன் அவர்களின் சகோதரன் அவர்களும் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தை தொடர்ந்து பொதுமக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான நினைவுரைகள் இடம்பெற்றன. லாக்கூர்னோவ் மாநகர சபையின் முன்னாள் ஆலோசகரும் தமிழின உணர்வாளருமான அந்தோனி ரூசெல், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளையோர் அமைப்பு உறுப்பினர் திவாகர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி, பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி ஜனனி ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி யசோ அவர்களின் செஞ்சோலைப் படுகொலை நினைவு சுமந்த கவிதையும் சிறப்பாக அமைந்திருந்தது.
வெளிநாட்டவர்கள் பலரும் எமது நினைவேந்தலுக்கான காரணத்தைக் கேட்டு தமது ஆறுதல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அப்பகுதியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் வழங்;கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்த பின்னர் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.









